எனது மாநிலங்களவை ஊதியம் விவசாயிகளுடைய மகள்களின் கல்விக்‍கு செலவிடப்படும்: எம்.பி ஹர்பஜன் சிங் அதிரடி அறிவிப்பு

டெல்லி: விவசாய மக்களின் பெண் குழந்தைகளின் கல்விக்கு தனது மாநிலங்களவை ஊதியத்தை செலவழிக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. பஞ்சாப் முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் பகவந்த் மான் கடந்த மாதம் 16ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த 31ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளராக ஹர்பஜன் சிங்கும், வேட்புமனு தாக்கல் செய்தார். ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள ஹர்பஜன் சிங், மாநிலங்களவை உறுப்பினரான தனது ஊதியத்தை விவசாயிகளுடைய மகள்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நாடு மேம்படுவதற்கான பங்களிப்பை ஆற்றவே தான் மாநிலங்களவைக்கு வந்துள்ளதாகவும், அதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளதாகவும், ஜெய்ஹிந்த் என்றும் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் ஆகும் நிலையில் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை காலையில் ஆம்ஆத்மி அரசு வெளியிட்டுள்ளது.

Related Stories: