ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த எட்டு வயது மாணவன்

நன்றி குங்குமம் தோழி

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்  சமூக இடைவெளியை கடைப்பிடித்து பள்ளியை திறந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவது என்பது சவாலான விஷயமாகவே கருதப்பட்டு வருகிறது. அந்த சவால்களை எளிதாக கடந்து சாதித்துள்ளனர் ஆசிரியர்கள். இதற்காக உலகமே அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் தங்கள் பிள்ளைகளின் ஒரு வருட படிப்பு பாழாகிவிடுமோ என தவித்த பெற்றோர்களுக்கு ஆன்லைன் கல்வி கைகொடுத்தது. ஆம்.சமூக இடைவெளியை பின்பற்றியும் அதேநேரத்தில் பெற்றோர் பாதுகாப்பிலும் பாடம் நடத்தமுடியும் என நிரூபித்த ஆன்லைன் கல்வி 2020ம் ஆண்டு மாணவர்களுக்கு வரப்பிரசாதம் என சொல்லலாம்.

ஆன்லைன் பற்றி எந்த பயிற்சியும் இல்லாத நிலையில் அரசுப் பள்ளிகளில் கணினிகளை கையாள தெரியாமல் இருந்த ஆசிரியர்களும் ஆன்லைன் கல்விக்கு மாறிய அதிசயத்தை இந்த கொரோனா தொற்று கொடுத்தது. இந்த சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து சமூகவலைத்தளத்தில் செய்தி வெளியிட்ட  வங்கதேசத்தை சேர்ந்த 8 வயது மாணவனை நெட்டிசன்கள் மட்டுமின்றி ஐ.நாஅமைப்பான யுனிசெப்பும் கொண்டாடுகிறது. பர்ஷாத் என்ற அந்த சிறுவன் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட டிவிட்டர் பதிவு வங்கதேச யுனிசெப் டிவிட்டரில் ஷேர் செய்யப்பட்டது.

பின்னர் அதை அமெரிக்காவின் நியுயார்க்கில் உள்ள யுனிசெப் நிறுவனம் மறு டிவிட் செய்தது. அவன் பதிவிட்ட செய்தியில் ''கொரோனா தொற்று நோய் பரவும் நிலையில் கூட டிஜிட்டல் கல்வியை அளித்த ஆசிரியர்களுக்கு நன்றி. போதுமான ஸ்மார்ட் போன்களோ ஆன்லைன் கல்வி குறித்த பயிற்சியும் இல்லாமல் எங்களுக்காக அதை எப்படி இயக்குவது என கற்று நாங்கள் வீட்டில் போடும் கூச்சலுக்கு மத்தியில் பாடத்தையும் தெளிவாக கற்பிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஆசிரியர் பெருந்தகைகளே.

இதன் மூலம் தீவிரமாக முயன்றால் எதுவும் முடியும் என்ற ஊக்கத்தையும் தந்துள்ளீர்கள்’’ என தெரிவித்திருந்தார். 18 வினாடிகள் ஓடும் அந்த வீடியோதான் இப்போது வைரலாக பரவி வருகிறது.

தொகுப்பு: கோமதி

Related Stories:

>