×

இளம் வீரர்களின் கடின உழைப்பே வெற்றிக்கு காரணம்: கேப்டன் கேன்வில்லியம்சன் பேட்டி

மும்பை: ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மேதின. இப்போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீசியது. கொல்கத்தா அணியில் ரகானே நீக்கப்பட்டு அறிமுக வீரராக ஆஸ்திரேலிய ஒரு நாள், டி20 கேப்டன் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்தே சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடியை தந்தது. தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்தாலும், 5வது பந்தில் வெங்கடேஷ்அய்யர் சிக்சர் அடித்தார். இதனால் முதல் ஓவரில் 9 ரன் கிடைத்தது. 2வது ஓவரை வீசிய யான்சென், 3வது பந்தில் பிஞ்ச் விக்கெட்டை சாய்த்தார். இதனையடுத்து 5வது ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன், முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரின் ஸ்டம்புகளை சிதறவிட்டார். அதிரடிக்காக இறக்கிவிடப்பட்ட சுனில் நரைன், தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க, அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தினார்.

உம்ரான் மாலிக்கின் வேகத்தை சந்திக்க சிரமப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 148 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் வீசிய யார்க்கருக்கு ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இதேபோன்று உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சை அடித்து ஆட முயன்று ஜாக்சனும் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் கேகேஆர் அணி 103 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் நிதிஷ் ராணா மற்றும் ரஸல் ஜோடி அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியை மீட்டனர். நிதிஷ் ராணா அரைசதமும், ரஸல் 25 பந்தில் 49 ரன்களும் அடித்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்பிற்கு கேகேஆர் 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 3 ரன்களிலும், வில்லியம்சன் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களத்துக்கு வந்த ராகுல் திரிபாதி ருத்ரதாண்டவம் ஆடினார்.

பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி, சிக்சர் என பறக்கவிட்ட அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்கு தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரமும் ஒத்துழைப்பு அளித்தார். பின்னர் அவரும் அதிரடியை காட்டினார். 37 பந்துகளில் 71 ரன்கள் விளாசி திரிபாதி ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் மார்க்ரம் 36 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இதனால் 13 பந்துகள் எஞ்சிய நிலையில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து சன்ரைசர்ஸ் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 ஆண்டுக்கு பிறகு கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் வெற்றி கண்டுள்ளது. அதோடு இந்த தொடரில் சன்ரைசர்ஸ்க்கு இது 3வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருந்த கேகேஆர் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

போட்டிக்கு பின் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ``கேகேஆர் அணியின் துவக்க விக்கெட்டுகள் 3 பேரை வீழ்த்தியது மிகுந்த நம்பிக்கையை தந்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் மார்கோ யான்சன், புவனேஷ்வர், நடராஜன், உம்ரான் மாலிக் என எங்கள் அணியின் பந்துவீச்சுப்படை மிக சிறப்பாக செயல்பட்டனர். ராகுல் திரிபாதி, மார்க்ரம் ஆகியோர் மிகச் சிறப்பாகவும் அதிரடியாகவும் ஆடினர். அவர்களது ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருந்தது. பேட்டிங் திறன் மிக நேர்த்தியாக இருந்தது. யான்சன் பவுன்சரில் அசத்தினார். உம்ரான் மாலிக் வேகம் 150 கி.மீட்டரை தாண்டியது மிக ஊக்கமளித்தது. சில பவுண்டரிகளை அவர் கொடுத்தாலும் சிறப்பான 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் முன்னேற்றம் காணப்படுகிறது. தொடர்ந்து அவர் சாதிப்பார். எங்கள் அணியின் இளம் வீரர்களின் கடின உழைப்புதான் இந்த தொடர் வெற்றிக்கு காரணம். இதுபோல் மேலும் வெற்றிகளை குவிக்க போராடுவோம்’’ என்றார்.

Tags : Canvilleamson , The hard work of young players is the reason for success: Interview with Captain Canvilleamson
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...