×

தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு : தொடர் விடுமுறையால் ஏற்காட்டில், நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு, நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

 அங்குள்ள அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜெண்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு களித்தனர். அங்குள்ள அண்ணா பூங்கா மற்றும் மான் பூங்காவில், குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை போக்கி மகிழ்ந்தனர். ஏற்காட்டில் நேற்று இதமான சீதோஷ்ணம் நிலவியதால், படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.

கூட்டம் அதிகமானதால், வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் திரண்டு வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதையொட்டி, போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஏற்காடு களையிழந்து காணப்பட்ட நிலையில், தற்போது கோடையையொட்டி, மக்கள் கூட்டம் படையெடுத்த வண்ணம் உள்ளதால், அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Yercaud , Yercaud,Tourist, Long Weekend
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து