×

கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதத்தில் குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் அமைப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான இயந்திரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கொடைக்கானல் நகராட்சி சார்பில், அமைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களும் முறையாக செயல்படவில்லை. இதனால் நகரில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடுமிடங்களில், காற்றின் ஈரப்பதத்தில் குடிநீர் தயாரிக்கும் நவீன இயந்திரத்தை, அமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. காற்றின் ஈரப்பதத்தை காற்றாடி உதவியுடன் இயந்திரம் உள்ளிழுத்து தூய குடிநீரை தயாரிக்கிறது.

 காலநிலையை பொறுத்து 24 மணி நேரத்தில் 500 லிட்டர் வரை குடிநீர் தயாரிக்க முடியுமென அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சாரத்தில் இயங்கும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரம் சுற்றுலாப்பயணிகளிடயே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரையண்ட் பூங்கா சாலையில் அமைக்கப்பட்ட இயந்திரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட குடிநீரை, சுற்றுலா காவலர்கள் அருந்தி சோதித்தனர். தற்போது நகரில் பிரையண்ட் பூங்கா, நாயுடுபுரம் செல்லும் டெப்போ ஆகிய 2 இடங்களில் இயந்திரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதேபோல, நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் தயாரிப்பு இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Kodaikanal , Kodaikanal, Water, Water Machine, plastic Free
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...