திருவண்ணாமலையில் சித்திரா பெளர்ணமியை ஒட்டி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி: பக்தர்கள் வசதிக்காக 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை: சித்திரா பெளர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் ஒரு லட்சம் பக்தர்கள் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.03 மணிக்கு தொடங்கிய பெளர்ணமி, நாளை அதிகாலை 1.07 மணி வரை உள்ளது.

இதனால் இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக சித்திரா பெளர்ணமிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சித்திரா பெளர்ணமிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை கடந்த ஆண்டை விட அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் மக்களின் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி, 40 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 39 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். சித்திரா பெளர்ணமி தினத்தன்று பக்தர்கள் கற்பூரம் ஏற்றவும், மலை ஏறவும் தடை விதிக்கப்பட்டுளள்து.   

Related Stories: