×

புதுப்பெண் கடத்தல் விவகாரத்தில் தற்கொலை முயற்சி ஏடிஎஸ்பி மீது பெண் இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு

ஈரோடு: ஈரோட்டில் பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர், ஏடிஎஸ்பி மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 7 மாதங்களாக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாவதி. இவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தற்போது, ஈரோடு சூரம்பட்டி வலசு காந்திஜி வீதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  
இந்நிலையில், இவர் கடந்த 13ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் திருமணம் செய்த ஜோடி, காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற சில நிமிடத்தில் புதுப்பெண்ணை உறவினர்கள் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார், 30 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் கடத்தப்பட்ட உஷா நந்தினியை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கிடையே, புதுமண தம்பதியை போதிய பாதுகாப்பின்றி அனுப்பியதற்காக இன்ஸ்பெக்டர் நீலாவதியை  ஈரோடு எஸ்பி சசி மோகன் வாக்கி டாக்கியில் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த நீலாவதி, செல்போனில் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அவரது குழந்தைகளை பாதுகாக்குமாறும் நேற்றுமுன்தினம் மெசேஜ் அனுப்பி விட்டு சென்றார். பின்னர், தோழி வீட்டில் மயங்கி விழுந்த நீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் நீலாவதி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து நீலாவதியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் கூறியதாவது:
காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் காவல் நிலைய வாசலில் நடந்திருந்தாலோ அல்லது காவல் நிலையத்துக்குள் நடந்திருந்தாலே நான் பொறுப்பேற்பேன்.  என் மேல் தவறு இருந்தால், ஒரு அதிகாரி நேரடியாக அழைத்து கேட்க வேண்டும். அதுதான் முறை. அதை விட்டுவிட்டு எடுத்த உடன் ஆயுதப்படைக்கு போ என சொல்கிறார். நான் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற உடன் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க உத்தரவிட்டேன். அதில், பணியை முறையாக செய்யாத சில பெண் எஸ்ஐக்கு மெமோ வழங்கினேன். இதனை அந்த எஸ்ஐ, ஏடிஎஸ்பி மேடத்திடம் கூறினார். நான் எஸ்ஐக்களுக்கு மெமோ கொடுத்ததால், என்னை பழிவாங்கும் எண்ணத்திற்கே ஏடிஎஸ்பி மேடம் வந்து விட்டார்.

நான் இந்த மாவட்டத்தில் ஒரு நிமிடம் கூட வேலை செய்ய முடியாத மனநிலையில் உள்ளேன். நான் டிஜிபியையும், தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து முறையிட உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : ADSP , New girl abduction, suicide attempt, ADSP, female inspector`
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!