×

திருவண்ணாமலையில் இன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்: 2,800 சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடக்கும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ‘‘சித்ரா பவுர்ணமி’’ விழா தனிச்சிறப்பு மிக்கது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டது. தற்போது, தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தடை நீங்கி கிரிவலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், இன்று அதிகாலை 2.23 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 1.17 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறப்பும், தொடர்ந்து கோ பூஜையும், திருப்பள்ளியெழுச்சியும் நடைபெறும். பின்னர், இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனம் உண்டு.

அதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், நிழற்பந்தல், தரை விரிப்புகள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்றும், நாளையும் 2,806 அரசு சிறப்பு பஸ்கள், 201 தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 932 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதையொட்டி, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து நருக்குள் வர வசதியாக மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதித்திருப்பதால், ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,Chitra Pavurnami Gorge , Thiruvannamalai, Chitra Pavurnami, Kiriwalam, Special buses
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...