வெயிலில் காண்பிக்க தூக்கிச் சென்றபோது 3வது மாடியில் இருந்து விழுந்த பச்சிளம் குழந்தை பரிதாப பலி: தாயின் 2 கால்கள் முறிந்து படுகாயம்

சென்னை: சென்னை மணலி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் (27). இவரது மனைவி யமுனா. இவருக்கு, கடந்த  மார்ச் மாதம் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தைக்கு மஞ்சள் காமாலை, விட்டமின் குறைபாடு இருப்பது தெரிந்தது. இதற்காக சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், சிகிச்சை முடிந்து யமுனா, குழந்தையுடன் வீடு திரும்பியபோது, தினசரி காலை வெயிலில் குழந்தையை சிறிது நேரம் காண்பிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.  

 அதன்படி, யமுனா தினசரி குழந்தையை வீட்டின் மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்று வெயிலில் காண்பித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை மூன்றாவது மாடியில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த யமுனா, திடீரென கீழே தவறி விழுந்துள்ளார். இதில், உடல் நசுங்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. யமுனாவின் 2 கால்களும் முறிந்து, பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.

தகவலறிந்து வந்த மணலி போலீசார், படுகாயமடைந்த யமுனாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: