அயோத்தியா மண்டபம் விவகாரம் சமூக ஆர்வலர் ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: மாநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை:  சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தை ராம சமாஜம் அமைப்பு நிர்வகித்து வந்துள்ளது. 2004ம் ஆண்டு ஆஞ்சநேயர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி உண்டியலில் காணிக்கை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மேற்கு மாம்பலம் சுப்ரமணியன் தெருவை சேர்ந்த ரமணி (68) என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து தற்போது இந்து அறநிலையத்துறை அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றியது செல்லும் என ஐகோர்ட்  தீர்ப்பளித்துள்ளது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் பாஜவினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநகராட்சி பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேரை கைது செய்தனர். இந்நிலையில், அயோத்தியா மண்டபத்தை நிர்வகித்து வந்த ராம சமாஜம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன், உதவி செயலாளர் ராமதாஸ் மற்றும் சங்க உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் சமூக ஆர்வலர் ரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரமணி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்த புகார் மனுவை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி நேற்று காலை முதல் அயோத்தியா மண்டபம் தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர் ஒருவர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரமணிக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: