கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஈஸ்வரப்பா.! முதல்வரிடம் கடிதத்தை அளித்தார்

பெங்களூரு: கர்நாடகாவில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈஸ்வரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் கே.பாட்டீல். காண்டிராக்டரான இவர் மாநில கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியான ஈஸ்வரப்பா வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் கமிஷன கேட்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தோஷ் பாட்டீல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது சாவுக்கு மந்திரி ஈசுவரப்பாதான் காரணம் என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, மந்திரி ஈசுவரப்பாவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதைத்தொடர்ந்து ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

மந்திரி ஈஸ்வரப்பா பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்தன. எனினும், நான் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று ஈஸ்வரப்பா கூறிவந்தார். இந்த நிலையில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று தனது மந்திரி பதவியை ஈஸ்வரப்பா ராஜினாமா செய்தார். அவர், முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

Related Stories: