×

அன்று ‘செக்ஸ்’ சிடி... இன்று ஒப்பந்ததாரர் தற்கொலை: இரண்டரை ஆண்டு பாஜக ஆட்சியில் 2 அமைச்சர்கள் காலி.!

புதுடெல்லி: கர்நாடகாவில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருவேறு குற்றச்சாட்டுகளால் தங்களது பதவியை இழந்துள்ளனர். இதனால் அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் (40). இவர் தன்னிடம் மாநில‌ ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டினார். இதனால் அவர் மீது ஈஸ்வரப்பா வழக்கு தொடுத்ததால், இருவ‌ருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்தார், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

சந்தோஷ் பாட்டீலை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் மீது உடுப்பி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்க மனு அளித்தனர். ஈஸ்வரப்பாவுக்கு பாஜகவுக்கு உள்ளேயும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் நேற்று ஈஸ்வரப்பா கூறுகையில், ‘எனக்கும், சந்தோஷ் பாட்டீலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் காங்கிரசார் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வரை அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்க முடிவெடுத்துள்ளேன்.

எனது கட்சிக்கும், அதன் தலைமைக்கும் சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் வெள்ளிக்கிழமை (இன்று) முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளேன்’ என்றார். கடந்த இரண்டரை ஆண்டுகால பாஜக ஆட்சியில், பதவி இருந்து ராஜினாமா செய்த இரண்டாவது பாஜக அமைச்சர் என்ற பெயரை ஈஸ்வரப்பா எடுத்துள்ளார். கடந்த ஆண்டு, செக்ஸ் சிடி ஊழல் தொடர்பாக அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி ராஜினாமா செய்தார். இவர் ஒரு பெண்ணுக்கு வேலைவாங்கித் தருவதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகார் தொடர்பாக, சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹல்லி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் ஜார்கிஹோலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

ரமேஷ் ஜார்ஹிகோலி ராஜினாமா செய்த போது முதல்வராக எடியூரப்பா பதவியில் இருந்தார். இப்போது முதல்வர் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் இருக்கும் ஈஸ்வரப்பா, 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் சிக்கி பதவியை இழந்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை இழந்தது, அம்மாநில அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம், எதிர்கட்சிகள் கொடுத்த அழுத்ததின் காரணமாகவே இரண்டு அமைச்சர்களும் பதவியை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் மத்தியில் அடுத்தாண்டு மே மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும் என்பதால், அடுத்தாண்டு ஜனவரிக்கு மேல் தேர்தல் பரபரப்புகள் தொடங்கிவிடும். இந்த நிலையில் ஆளும் பாஜக அமைச்சர்கள் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளில் சிக்கி பதவியை இழந்து வருவதால் கர்நாடகா அரசியல் சூடுபிடித்துள்ளது.


Tags : Bajaba , Then ‘Sex’ CD ... Contractor commits suicide today: 2 ministers vacated during two and a half years of BJP rule!
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக,...