×

திறந்தவெளி பாராக செயல்படும் குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட்

*பேரூராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குஜிலியம்பாறை :பல லட்சம் செலவில் கட்டப்பட்ட குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் பயன்பாடின்றி திறந்த வெளி பாராக உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை உள்ளது. கரூர்-திண்டுக்கல் வழித்தடத்தில் 11அரசு பேருந்துகளும், 14 தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதேபோல் குஜிலியம்பாறையில் இருந்து வேடசந்தூர், லந்தக்கோட்டை, ஆர்.வெள்ளோடு, மணப்பாறை, வீரப்பூர், கோயம்புத்தூர், அரவக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் அரசு பேருந்தும், திருச்சி, வேடசந்தூர் ஆகிய வழித்தடத்தில் தனியார் பேருந்தும் இயக்கப்படுகிறது.

குஜிலியம்பாறை வழித்தடத்தில் வந்து செல்லும் அனைத்து பேருந்துகளின் போக்குவரத்து வசதிக்காக, பாளையம் பேரூராட்சி சார்பில் கடந்த 1986ம் ஆண்டு குஜிலியம்பாறையில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 1996-2001ம் ஆண்டு பஸ் ஸ்டாண்டு முழுவதும் சிமிண்ட் சாலை அமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டது.

 இந்நிலையில் இவ்வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ளே செல்லாமல், பஸ் நிலையம் அமைந்துள்ள சாலையின் வெளியிலேயே பேருந்து நிறுத்தி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லாமல் வெளியே நின்றபடி செல்வதால் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டு பயன்பாடின்றி வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.

இதை சாதகமாக்கி கொண்ட குடிமகன்கள் பகல், இரவு என எந்நேரமும் குடித்து விட்டு அட்டகாசம் செய்கின்றனர். இதனால் பகல், இரவு என எந்நேரமும் குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டு திறந்த வெளி பாராகவே செயல்பட்டு வருகிறது. மேலும் குடித்து விட்டு குடிமகன்களிடம் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறது.

 இதனால் அசம்பாவித சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டிற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுத்து, திறந்த வெளி பாராக செயல்படும் பஸ் ஸ்டாண்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kujilyamparai , guziliamparai,Open bar, Bus Stand
× RELATED குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கொரோனா...