×

நீரை தேக்கி வைக்கவும், உப்புநீர் புகாத வகையிலும் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் : விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி காவிரி பாசனத்தின் கடைமடை பகுதியாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் நெல், உளுந்து, பயறு, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட தோட்ட பயிர்களையும் மல்லிகை, முல்லை, ரோஜா, காக்கட்டான் உள்ளிட்ட பூச்செடிகளையும் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகாலமாக கொள்ளிடம் ஆற்றில் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு கடல் நீர் உள்ளே புகுந்து விட்டது.

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளூர், வடரங்கம் ஆகிய பகுதிகளில் அரசு சார்பில் மணல் குவாரி நடத்தி அதிக அளவில் பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டுவிட்டதால் சாதாரணமாக ஆற்றின் ஆழத்தை விட ஆற்றின் ஆழம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் கடல் நீர் ஆற்றுக்குள் எளிதில் உள்ளே புகுந்துவிட்டது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விளைநலங்களில் உப்புநீர் புகுந்து நிலங்கள் பயிர் சாகுபடி செய்ய ஏற்றதாக இல்லாமல் போய்விட்டது. மேலும் தொடர்ந்து காலம் காலமாக தோட்டப் பயிர் சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்போது மிகவும் குறைந்த 50 ஏக்கர் நிலங்களில் மட்டுமே தோட்டபயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றுக்குள் உப்புநீர் புகுந்து விட்டதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இதனால் அனைத்து கிராம மக்களும் தற்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தையே குடிநீருக்காக நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் மேலும் பல மாவட்டங்களுக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றுக்குள் உப்பு நீர் தொடர்ந்து புகுந்து கொண்டிருப்பதால் கூட்டு குடிநீர் குழாய் திட்டத்தின் மூலம் அனுப்பப்படும் குடிநீரும், வரும் காலத்தில் உப்பு நீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே கொள்ளிடம் ஆற்றுக்குள் உப்பு நீர் புகுவதை கட்டாயமாக தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை எளிதில் நீக்க முடியும். கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு புகுவதை தடுக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்தான் தற்காலிகமாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி உப்புநீரை தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்கி தந்ததும் திமுக அரசுதான்.

எனவே கொள்ளிடம் ஆற்றுக்குள் உப்புநீர் புகுந்தால் குடிநீர் தட்டுப்பாடு நிச்சயமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே முன்பு குறிப்பிட்டது போல தடுப்பணை அமைத்து ஆற்றில் தண்ணீர் வருவதை தேக்கி வைத்தும், அதிகப்படியான நீரை வெளியேற்றும் வகையிலும் உப்பு நீர் உள்ளே புகாத வகையிலும் கதவணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வெட்டாத்தங்கரை விசுவநாதன் தெரிவித்தார். இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : Kollidam , Kollidam,Door Dam,Farmers Requested
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி