×

ஏலகிரி மலையில் இடி மின்னலுடன் கனமழை மலை சாலைகளில் மரங்கள் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

*3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி

ஜோலார்பேட்டை : சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால் மலை சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதிகளிலும், சுற்றுலாதலமான ஏலகிரி மலை பகுதியிலும் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது.

பின்னர் சூறாவளி காற்று வீசி இடி மின்னலுடன் ஆலங்கட்டி கன மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், விடுமுறை நாளான  நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏலகிரி மலை சுற்றுலாவிற்கு ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் திரண்டனர். திடீரென கனமழை பெய்ததால், ஏலகிரி மலையில் உள்ள 1வது, 2வது, 4வது, மற்றும் 7வது கொண்டை ஊசி வளைவு சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் மலைப்பகுதியில் இருந்து மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்களில் பயணித்தவர்கள் பாதிப்பின்றி தப்பினர். மரங்கள் விழுந்ததால் கார், பஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே சாரை சாரையாக நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் வாகனங்களில் தவித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை, வனத்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி 4 வளைவுகளிலும் ஆங்காங்கே விழுந்திருந்த 7 மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதனால் மலை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல், ஜோலார்பேட்டையில் உள்ள சந்தை கோடியூர் பகுதியில்  சிவன் கோயில் அருகே ஏரிக்கரையின் மீது இருந்த பெரிய புளிய மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததால், அப்பகுதி மக்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் நேற்று மாலை திடீரென இடி மின்னல் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்ததால், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் கன மழையால் குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Elagiri mountain , Jollarpettai, Tourist,Heavy Rains,traffic jams
× RELATED ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்