கொடைக்கானலில் தொடர் கனமழை அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ெதாடர் விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மிதமான மழையும், சில நேரங்களில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது.

குறிப்பாக கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான பூம்பாறை மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய அருவிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இவ்வாறு, ஆர்ப்பரிக்கும் தண்ணீரைப் பார்த்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் ரசித்து செல்கின்றனர்.

அதுபோல், முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் ஆகிய பகுதிகளையும் சுற்றுலாப்பயணிகள் ரசித்தனர். ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையின் காரணமாக, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என மலைப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்கு நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் அறிவித்தார். அருவிக்கு வரும் நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: