சித்திரை முதல் நாளில் பொன் ஏர் திருவிழா பூமித்தாயை வணங்கி உழுத விவசாயிகள்

எட்டயபுரம் : எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் சித்திரை முதல் நாளையொட்டி பொன் ஏர் திருவிழா நடந்தது. பூமித்தாயையும், சூரியனையும் வணங்கி விவசாயிகள் நிலத்தில் முதல் உழவிட்டும் நவதானியங்களை விதைத்தும் விவசாய பணியை துவக்கினர்.

தமிழகத்தில் மானாவாரி விவசாயிகள் சித்திரை முதல் நாளன்று சூரியனையும், பூமித்தாயையும் வணங்கி நிலங்களில் முதல் உழவிட்டு விவசாய பணிகளை துவங்குவது வழக்கம். அதன்படி சித்திரை முதல் நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள பிதப்புரம் மற்றும் சுரைக்காய்பட்டி கிராமங்களில் பொன் ஏர் திருவிழா நடந்தது.

இதையொட்டி இக்கிராம விவசாயிகள் தங்கள் வீடுகளில் உள்ள ஏர்கலப்பை, டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளை சுத்தம் செய்தனர். காளைகளை குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து அலங்கரித்து ஊர் எல்லையில் உள்ள ஒரு இடத்தில் கூடினர். அங்கு விதை பொருட்கள், விவசாய கருவிகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று கிராமத்தில் பொதுவானதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்திற்கு சென்றனர். அங்கு விவசாயிகள் ஒன்று கூடி மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி பூமித்தாயையும் சூரிய பகவானையும் வணங்கி நிலத்தில் செடிகளை வெட்டி சுத்தப்படுத்தி, முதல் உழவிட்டு நவதானியங்களை விதைத்து இந்த ஆண்டின் முதல் நாளன்று விவசாய பணியை துவங்கினர். இதில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொன் ஏர் பூட்டும் திருவிழா நடந்தது. நிலத்தில் நவதானியங்களை விதைத்துவிட்டு திரும்பிய விவசாயிகளை ஊர் எல்லையில் முறைப்பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர். மோர், பானகரமும் வழங்கினர். இவ்விழா குறித்து சிங்கிலிபட்டி விவசாயி சேதுராஜ் கூறுகையில், தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், விவசாயத்தை வளர்க்கும் விதமாகவும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சித்திரை மாதம் 1ம் தேதி பொன் ஏர் பூட்டும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பாக வைத்து இந்நாளில் தங்களது நிலங்களில் விதைப்பு செய்து விவசாயத்தை தொடங்குவோம்.

தமிழ் பாரம்பரிய முறைப்படி காலம்காலமாக இத்திருவிழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.இதேபோல் கோவில்பட்டி அருகே சிங்கிலிப்பட்டியில் பொன் ஏர் பூட்டும் திருவிழா நடந்தது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், பஞ். தலைவர்கள் வேடப்பட்டி செல்லக்குமார், ஆற்றங்கரை சீத்தாராமன், நாட்டாமை முத்துக்கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் சேதுராஜ், பந்தயமாடுகள் சங்க தலைவர் சங்குச்சாமி, ஊர் தலைவர் துரைராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

பிள்ளையார்நத்தத்தில் ஊர் நாட்டாமை அப்பாசாமி நாயக்கர் புஞ்சையில் ஒன்றுகூடி அங்கு நனைய போட்ட பச்சரிசி, கம்பரிசி, நிறை நாழி கம்பு, நெல் வைத்து வழிபட்டனர்.

 பின்னர் நவதானியங்கள், பருத்தி விதைகள் தூவப்பட்டது. 60க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கொண்டு உழவு நடந்தது. நிகழ்ச்சியில் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, கிளை தலைவர் சவுந்தரராஜன், ராஜாராம், முனியசாமி, யோகராஜ், கனகராஜ், குருராஜ், ஆழ்வார்சாமி நாயக்கர், வேலுசாமி, சீனிவாசன் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பொன்னேர் உழவு நடந்தது. புத்தாண்டு தொடக்க நாளிலேயே மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: