×

குன்னூர் பகுதியில் குடியிருப்பு அருகே முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணி தீவிரம்

குன்னூர் : குன்னூர் பகுதியில் குடியிருப்பு அருகே முகாமிட்ட 9  யானைகளை  ‌வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் யானை வழித்தடத்தை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி உதவியுடன் அழித்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு யானைக்கூட்டம் வழக்கமான  பாதையில் வந்துள்ளது.

அப்போது குட்டி யானை ஒன்று நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து மலை  ரயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதி வரை உருண்டு சென்று பின்னர் அங்கிருந்து  எழுந்து சென்றுள்ளது. இந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற தாமாகவே முன்வந்து  யானை வழித்தடம் பாதுகாப்பு குறித்து வழக்கு தொடுத்தது. உயர் நீதிமன்ற  நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது யானை வழித்தடத்தை  மறித்து சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டு வரும் நெடுஞ்சாலை துறையினரிடம்  உரிய அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தற்போது யானைகள் கடந்து  செல்ல வழி செய்வதாக நெடுஞ்சாலைத்துறை உறுதியளித்துள்ளது. தற்போது 2 குட்டியுடன் 9 யானைகள் கடந்த 23 நாட்களுக்கு மேலாக குன்னூர் மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளான கிளண்டேல், காட்டேரி  பகுதி அருகே முகாமிட்டு குடியிருப்பு பகுதியில் இருந்த வாழை மரங்களை உண்டு  சென்றன.

9 யானைகள் அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் அருகே வருகின்றன.  தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் யானைகளை பார்க்க ஏராளமான சுற்றுலா  பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி யானைகளை புகைப்படங்கள் எடுத்து  தொந்தரவு செய்கின்றனர்.

குட்டிகள் இருப்பதால் அவற்றை பாதுகாக்க சுற்றுலா  பயணிகளை யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே யானைகளின் பாதுகாப்பை கருதியும்,  மக்களின் பாதுகாப்பை கருதியும் யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட  வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Gunnur , Conoor, Forest Elephant, Forest
× RELATED மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!