×

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.364 கோடியில் செவிலியர் கண்காணிப்பு மையம், உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.364.22 கோடி செலவில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள் மற்றும் 516 படுக்கைகள் கொண்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ரூ.65 கோடி செலவில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2021-22ம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பு மையங்களுடன் கூடிய 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றும்; 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரூ.266 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில், 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார அளவில் உள்ள 139 அரசு மருத்துவமனைகளில் அமைந்துள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த சிகிச்சை பிரிவுகளில் உள்ள தீவிர சிகிச்சைப் படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் முக்கிய உடலியக்க செயல்பாடுகள், தொடர்ச்சியாக மருத்துவ தரவுகள் வாயிலாக, நேரடியாக செவிலியர் கட்டுப்பாட்டு மையத்திலுள்ள கண்காணிப்பு திரையில் காட்சிப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

மேலும், 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா ரூ.2 கோடியே 27 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ரூ.97 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 516 படுக்கைகளுடன் கூடிய பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன்மூலம், இப்பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் படுக்கைகள் ஒவ்வொன்றுடனும் உயர்ரக மருத்துவக் கருவிகளான, மல்டிபாராமானிட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், சிபேப், இசிஜி, எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சிரிஞ் பம்ப், என்டோடிரக்கியல் கப் மானோமீட்டர் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தீவிர சிகிச்சைப் படுக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மத்திய செவிலியர் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி அருகில் 2,93,000 சதுர அடி பரப்பளவில் ரூ.65 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், இயற்கை மருத்துவச் சிகிச்சைகளான நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், யோகா கிரியா சிகிச்சைகள், மண் சிகிச்சை போன்ற சிகிச்சைகளும், யோகா பயிற்சிகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். மருத்துவக் கல்வி இயக்ககத்தின் சார்பில் ரூ.124 கோடியே 97 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வாயிலாக 108 இலவச அவசரகால ஊர்தி சேவையை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சாலைப் பாதுகாப்பு மாதிரி வழித்தடத்தில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.5 கோடியே 34 லட்சம்  மதிப்பீட்டில் இருபது எண்ணிக்கையிலான 108 அவசரகால ஊர்திகளின் சேவைகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தநிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார், மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு பணி அலுவலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குநர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத் தலைவர் தீபக் ஜேக்கப், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் பா.கணேசன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன இயக்குநர் (பொறுப்பு) மணவாளன்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Tags : Nurse Surveillance Centre ,People's Welfare Department ,CM ,M.D. ,KKA ,Stalin , Rs 364 crore Nursing Monitoring Center on behalf of the Public Welfare Department, Advanced Intensive Care Units: Chief Minister MK Stalin inaugurated
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...