×

வெற்றியை பறித்த ரன்அவுட்: ரோகித் சர்மா வருத்தம்

புனே: புனேவில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும்  மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அதுமட்டுமல்ல நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடர்களில் முதல் ஆட்டத்தில் மும்பை தோற்பது வாடிக்கை. எனவே டெல்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோற்றதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து 5 ஆட்டங்களிலும் தோல்வி, என்பது தான் மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை  தந்துள்ளது.   

பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ‘தோல்விக்கான காரணம் என்று எதை குறிப்பிடுவது என்று தெரியவில்லை. நாங்கள் நன்றாகதான் விளையாடினோம் என்று நினைக்கிறேன். வெற்றியை நெருங்கினோம். ஆனால் 2 ரன் அவுட்கள் எங்கள் வெற்றியை பறித்து விட்டது. இரண்டாவது பாதியில் பஞ்சாப் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். சூழ்நிலைகளை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்  போல் விளையாட வேண்டும். ஆனால் 198ரன் எளிதில் எட்டக் கூடியது என்று நினைத்தேன். அடுத்த ஆட்டத்துக்கு சிறப்பாக  தயாராகி வருவோம்’ என்றார். மும்பை அடுத்த ஆட்டத்தில் நாளை புதிய அணியான லக்னோவை எதிர்கொள்கிறது.

ரோகித்துக்கு தடையா? பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.25லட்சம், மற்ற வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அல்லது ஆட்ட கட்டணத்தில் தலா 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே டெல்லிக்கு எதிரான ஆட்டத்திலும், இதே பிரச்னைக்காக ரோகித்துக்கு ரூ.12லட்சம் அபராதம் விதித்திருந்தனர். இப்போது 2வது முறையாக விதியை மீறியதால் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டது. ஒருவேளை இதே தவறு 3வது முறையாக நடந்தால் மீண்டும் ரோகித் சர்மாவுக்கு 25லட்சம், வீரர்களுக்கு தலா 6 லட்சம் அபராதமாக விதிக்கப்படும். கூடவே ரோகித் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும்.

Tags : Rohit Sharma , Run out to win: Rohit Sharma upset
× RELATED ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி