×

பசிபிக் கடலில் லா நினோ இந்தியாவில் தென்மேற்கு பருவமழை 99% பெய்யும்: வானிலை மையம் கணிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 99 சதவீதம் கிடைக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் நிலவும் எல் நினோ, லா நினோ அடிப்படையில் இந்தியாவில் பருவமழையின் அளவு இருக்கும். அதன்படி, பசிபிக் பெருங்கடலில் தற்போது குளிர் காற்று நிலவுவதால் (லா நினோ). இந்தியாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான நிலையில் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அது தனது அறிக்கையில், ‘இந்தியாவுக்கு  தென்மேற்கு பருவமழை மூலமாகவே அதிக மழைப்பொழிவு கிடைக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் தொடங்கி செப்டம்பரில் முடியும்.  இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும். இந்த பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 99 சதவீதம் மழை பெய்யும் என்று தெரிகிறது. இந்த கணிப்பில் 5 சதவீதம் கூடவோ, குறையவோ கூடும்,’ என கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் 17 வரை கனமழை: தென் தமிழ்நாட்டின் கடல் பகுதியின் மேல் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக கேரளாவிலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம் உள்பட மாவட்டங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வரும் 17ம் தேதி வரை  நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஒரு சில இடங்களில்  இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களில்  கொச்சியில் தான் மிக அதிகமாக 7.3 செமீ மழை பெய்தது. மார்ச் 1 முதல் 13 வரை கேரளாவில் 16.48 செமீ மழை பெய்து உள்ளது. இந்த நாட்களில் வழக்கமாக பெய்யும்  கோடை மழையை விட 121 சதவீதம் கூடுதலாகும்.

Tags : La Nino ,Pacific Ocean Southwest India ,Meteorological Center , La Nino in the Pacific Ocean 99% of southwest monsoon rains in India: Meteorological Center forecast
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...