×

டான்பாஸ் பிராந்தியத்தில் திடீரென தீவிர தாக்குதல் பதுங்கிய ரஷ்யா பாய்ந்தது: இருநாடுகளும் தலா 40,000 வீரர்கள் குவிப்பு; உக்ரைன் ஏவுகணை வீச்சில் ரஷ்ய கப்பல் நாசம்

கீவ்: கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா, திடீரென தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இருநாட்டு தரப்பிலும் தலா 40,000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதால், கடந்த சில நாட்களாக குறைந்திருந்த போர் தீவிரம் மீண்டும் உக்கிரமடைந்து உள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், 50 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், இர்பின், மரியுபோல், செர்னிவ், புச்சா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா படைகள் கடும் தாக்குதல் நடத்தியதுடன், கொடூரமான இனப்படுகொலை, பலாத்காரம், சித்ரவதை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆயுத உதவியால், பதிலடி தாக்குதலில் ரஷ்யாவை உக்ரைன் திணறடித்தது.

இதனால், ஆத்திரமடைந்த ரஷ்யா மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை சுடுகாடாக்கும் முயற்சியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இந்த பகுதியில் சண்டையிட்ட ஆயிரம் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களுடன் சரணடைந்ததாக, ரஷ்யா தெரிவித்தது. ஆனால், இதை உக்ரைன் மறுத்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக, போர் தொடங்கிய பிப்.24ம் தேதியில் இருந்து அமெரிக்கா இதுவரை ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள், தளவாடங்களை வழங்கி உள்ளது. தற்போது, மேலும் ரூ.5,720 கோடிக்கு ஆயுதங்களை வழங்க, அமெரிக்கா அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நடத்திய தாக்குதலை சில நாட்களுக்கு முன் திடீரென நிறுத்திய ரஷ்யா, கிழக்கு உக்ரைன் மீது கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தது. எல்லா இடங்களிலும் தாக்குதலை குறைத்தது. படையை பலப்படுத்தவே, ரஷ்யா பதுங்குவதாக உலக நாடுகள் சந்தேகித்தன. இதை நிரூபிப்பது போல், டான்பாஸ் பிராந்தியத்தில் நேற்று முதல் தீவிரமான தாக்குதலை ரஷ்யா துவங்கி உள்ளது. இருதரப்பிலும் சுமார் 40 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு, பல இடங்களில் கடுமையாக சண்டை நடக்கிறது. ரஷ்யாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் அலெக்ஸாண்டர் ட்வார்னிகோவ் தலைமையில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

மேற்கு நாடுகள் ஆயுத உதவியால் கவச வாகனங்கள், டாங்கிகள், நீண்ட தூர ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள், நவீன உபகரணங்கள் மூலம் உக்ரைன் முகாமிட்டுள்ளது. இதேபோல், உக்ரைனின் தலைநகர் கீவ்வை நோக்கி அணிவகுத்து டாங்கிகள் பேரணி போல், கிழக்கு நோக்கி தற்போது ரஷ்யா அணிவகுத்து நிற்கிறது. இதற்கிடையே, கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் தலைமை போர்க்கப்பல் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட 2 ஏவுகணை தாக்குதலில், அக்கப்பல் அழிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. கப்பல் சேதமடைந்ததை ரஷ்யாவும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் இது நடக்கவில்லை. கப்பலில் இருந்து வெடி மருந்துகள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாகவும், கப்பலில் இருந்த 500 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ‘உக்ரைனில் இலக்கு நிறைவேறும் வரை ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடரும். இழப்புகளை குறைக்க ரஷ்யா விரும்புவதால் வேகமாக நகரவில்லை’ என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். இதனால், கிழக்கு பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் கடுமையாக இருக்கும் என்று புடின் சூசுகமாக தெரிவித்துவிட்டார். இதன் மூலம், ரஷ்யாவின் 2.0 போர் உக்கிரமடைந்துள்ளது.

* 4 நாட்டு அதிபர்கள் உக்ரைனுக்கு பயணம்
போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளின் அதிபர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு ரயிலில் வந்தனர். பின்னர், அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரஷ்ய தாக்குதலில் சேதமான பகுதிகளில் போர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர். 4 நாடுகளின் அதிபர்கள் உக்ரைன் வருகை, நேட்டோவின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளில் இருந்து ஒரு வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தியது. இந்த 4 நாடுகளில் மூன்று, உக்ரைனை போல் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த நாடுகள்.

* பேரழிவை சந்திக்கும் வளரும் நாடுகள் உக்ரைனில் நடக்கும் போர், பல்வேறு வளரும் நாடுகளின்
பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக ஐ.நா
தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அது பட்டியலிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

* இந்த நாடுகளில் வாழும் 170 கோடி மக்களில் மூன்றில் ஒரு பகுதியான 57 கோடி மக்கள் ஏற்கனவே வறுமையில் வாழ்கின்றனர். தற்போது, உணவு, நிதி நெருக்கடியால் வறுமை மேலும் அதிகரிக்கும்.
* 107 நாடுகளில் வாழும் மக்கள், உணவு விலை உயர்வு, எரிசக்தி விலை உயர்வு மற்றும் கடுமையாக நிதி நெருக்கடி நிலைமைகளில் ஏதாவது ஒன்றையாவது சந்தித்துளளனர்.
* 120 கோடி மக்கள் தொகை கொண்ட 69 நாடுகளில் மேற்கண்ட 3 நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. இதில், ஆப்பிரிக்காவில் 25 நாடுகள், ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 25 நாடுள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 19 நாடுகள் அடங்கும்.
* உலகின் முதன்மையான இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளர், 2வது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவும், அதன் அண்டை நாடான பெலாரசும் உலகின் உர தேவையில் 20 சதவீதத்தை ஏற்றுமதி செய்கின்றன.
* கோதுமை இறக்குமதியில் 36 நாடுகள் ரஷ்யா, உக்ரைனை நம்பியே உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கோதுமை, சோளத்தின் விலைகள் 30% உயர்ந்துள்ளன.
* கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் விலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் இயற்கை எரிவாயு விலையும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

* ஐ.நா. தேர்தலில் ரஷ்யா தோல்வி
ஐ.நா. சபையின் அரசு சாரா அமைப்புகளுக்கான குழு, ஐ.நா. மகளிர் நிர்வாக வாரியம், யுனிசெப் நிர்வாக வாரியம் மற்றும் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கான நிரந்தர மன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் போட்டியிட்ட ரஷ்யா, நான்கிலும் தோல்வியை தழுவியது.

Tags : Russia ,Donbass ,Ukraine , Russia plunged into an abrupt offensive in the Donbass region: 40,000 troops each from both countries; Russian shipwreck in Ukraine missile strike
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...