×

தொழிலதிபரை மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரம் போலீஸ் உதவி கமிஷனரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை கடத்திச் சென்று அவரை அடித்து மிரட்டி அவரது சொத்துகளை வேறு ஒருவர் பெயருக்கு எழுதி வாங்கியதாக சென்னை திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., பாண்டியராஜன், போலீஸ்காரர்  கிரி உள்பட பலர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு  உதவி கமிஷனர் சிவகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் சந்தோஷ், மனுதாரரான உதவி கமிஷனர் சிவகுமார் தன்னிடம் புகார் கொடுக்க வந்த ராஜேஷை அடித்து உதைத்து  ரூ.20 கோடி மோசடி செய்ததாக திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் அடிப்படையில், ராஜேஷை உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர் கடத்திச் சென்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை எழுதி வாங்கியுள்ளனர். உதவி கமிஷனர் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் படை, புகார்தாரர் ராஜேஷின் சொத்து ஆவணங்களை பறித்துக் கொண்டு, அவரது தாயாரை காயப்படுத்தியுள்ளனர். சில நாட்களுக்கு பின்னர் ராஜேஷை திருமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு பிடித்து சென்று, அவரது சொத்தை 3வது குற்றவாளியின் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டனர்.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்கும் மனுதாரரான உதவி கமிஷனர்தான்  முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாளில் இருந்து மனுதாரர் சிவகுமார் தலைமறைவாக உள்ளார். தற்போது இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரை போலீஸ் கஷ்டடியில் வைத்து விசாரிப்பது அவசியம். எனவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கும், புகார்தாரருக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டது. இது சம்பந்தமாக சமரச ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, உதவி கமிஷனருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி,”மனுதாரர் சிவகுமாருக்கு எதிராக புகார்தாரர் முக்கிய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இப்போது, இருதரப்பும் சமரசமாக போய் விட்டனர் என்பதற்காக, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து  மனுதாரரை விட்டு விட முடியாது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரியான மனுதாரர் தலைமறைவாகி இருப்பதன் மூலம் அவரது உள்நோக்கம் என்னவென்று வெளிப்படுகிறது. இவரை முன்ஜாமீனில் விட்டால், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டார். எனவே, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags : Assistant Commissioner of Police , Dismissal of the Assistant Commissioner of Police's pre-bail petition in the case of extorting property of a businessman
× RELATED அயனாவரம், தலைமை செயலக காலனியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 18 கிலோ பறிமுதல்