பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கற்களை வீசி மோதிக்கொண்ட 11 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 11ம் தேதி திருப்பதி செல்லும் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்களும், அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பயணித்தனர். பெரம்பூர் ரயில் நிலையம் வந்தவுடன், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் இருந்தபடியே கற்களை தூக்கி திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்கள் மீது எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, திருப்பதி செல்லும் விரைவு ரயிலை நிறுத்திய மாநில கல்லூரி மாணவர்கள், தண்டவாளத்தில் இறங்கி அங்கிருந்த ஜல்லி கற்களை எடுத்து, மின்சார ரயிலில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாக வீசினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பயணி திருவள்ளூரை சேர்ந்த விஜய் (24) அளித்த புகாரின்பேரில் பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து வீடியோ பதிவு மூலம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளை சேர்ந்த விநாயகமூர்த்தி, சிவபதி, கவுதம், கோகுல், சரவணன், முகேஷ், சாமுவேல், சுரேஷ்பாபு ஆகிய 8 பேர் மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் என 11 மாநில கல்லூரி மாணவர்களை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 பேரை புழல் சிறையிலும், 3 சிறுவர்களை கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.

Related Stories: