×

லிட்டில் மாஸ்டர்ஸ்...

நன்றி குங்குமம் தோழி

ஆன்லைனில் தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கும் இரட்டையர்கள்

கொரோனாவால் உலகமே முடங்கிய நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டது குழந்தைகள் உலகம்தான். நண்பர்களுடன் பொது இடங்களில் விளையாடவோ, அரட்டை அடிக்கவோ, வெளியே எங்கும் செல்ல முடியாமல் பெரும் மனச் சோர்வோடு, உடல் சோர்வுக்கும் ஆளாகியுள்ளனர். சிலர் தங்கள் குழந்தைகளை ஆன்லைன் பாடத்தில் இணைத்து விட்டிருந்தாலும், அதில் தங்கள் நண்பர்களுடன் சேட் செய்து கொண்டிருப்பதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் எப்படா இவங்களுக்கு பள்ளி திறக்கும் என்ற ஏக்கத்தில் குழந்தைகளை விட அவர்களது பெற்றோர்களே ஆர்வமாக உள்ளனர்.

இது போன்ற சூழலில்தான் கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கி இருக்கும் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறார்கள் காரைக்காலைச் சேர்ந்த 10 வயது இரட்டையர்கள்.  “நானும், என் தங்கை ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். 3 வயதில் இருந்தே தற்காப்புக் கலையை ஆர்வமாக பயின்று வருகிறோம். கடின பயிற்சி மற்றும் விடாமுயற்சியினால் ஒன்பது வயதிலேயே கராத்தே கலையில் இரண்டு  ‘பிளாக் பெல்ட்’  வென்ற  இரட்டையர்கள் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறோம். பெற்றோரின் அரவணைப்பும், மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமாரின் பயிற்சியும் தற்காப்புக் கலையில் சிறப்புமிக்கவர்களாக எங்களை மாற்றி இருக்கிறது. மாநில, தேசிய அளவில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று, பல பட்டங்களை வென்றிருக்கிறோம். இனி வரவிருக்கும் போட்டிகளுக்காகவும் தயாராகி வருகிறோம்” என்று தன்னை பற்றியும், தன் தங்கை பற்றியும் மழலை மொழியில் அறிமுகப்படுத்திக் கொண்டார், ஸ்ரீவிசாகன்.

அவரை தொடர்ந்து ஸ்ரீஹரிணி பேசும் போது, “தற்காப்பு பயிற்சியும், தற்காப்பு போட்டிகளும்தான் எங்களை உற்சாகமாக இயங்க செய்கிறது. நினைவு தெரிந்த வயதில் இருந்தே தற்காப்புக் கலையோடுதான் நாங்க இருவரும்  வளர்ந்தோம். கராத்தே, குங்ஃபூ, சிலம்பம், குத்துச்சண்டை, சுருள் வாள், வாள் பயிற்சி, நுங்சாக்... என பல்வேறு தற்காப்பு பயிற்சிகளை பயின்று வருகிறோம். இதில் பெரும்பாலான கலைகளில், பல பரிசுகளையும் வென்றிருக்கிறோம்” என்றார். வீடு நிறைய பரிசு கோப்பைகளை நிரப்பி வைத்திருக்கும் இந்த சாதனை குழந்தைகளிடம் தற்காப்பு பயிற்சியின் அவசியம் மற்றும் வீடியோ மூலம் கற்றுக் கொடுக்கும் யோசனை எவ்வாறு வந்தது என்பதை பற்றி கேட்ட போது,  “கொரோனா ஊரடங்கு சில பெரியவர்களையும், குழந்தைகளையும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து சமைக்கிறார்கள். சிலர் படிக்கிறார்கள். பல விஷயங்களை பழகுகிறார்கள். அந்த வகையில் தற்காப்புக் கலைகள் பழகும் ஆசை இருக்கும் குழந்தைகளுக்கு உதவியாகவே தற்காப்பு பயிற்சி வீடியோக்களை உருவாக்கினோம்.

நானும், தங்கையும் கராத்தே, குங்ஃபூ, சிலம்பம் பயிற்சிகளை செய்யும் போதும் அதை அப்பா வீடியோ எடுத்து பதிவு செய்வார். அதை அப்பா அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தான் முதலில் வாட்ஸ்-அப் செய்தார். அது அப்படியே மற்ற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், யூ-டியூப்பில் பரவத் தொடங்கியது. எங்களின் வீடியோக்களை நிறைய பேர் பார்க்கிறாங்கன்னு தெரிந்து  கொண்ேடாம். அதனால் இதை ஏன் ஒரு பயிற்சி தளமாக மாற்றி அமைக்கக்கூடாதுன்னு
அப்பாவிடம் கேட்ட போது அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்படித்தான் www.karatetwins.com என் இணையதளத்தை அமைத்தோம். இதில் எங்களது பயிற்சி வீடியோக்கள் அனைத்தும் பதிவு செய்து வருகிறோம். இதன் மூலம் பல குழந்தைகள் கராத்தே பயிற்சி பெறுகிறார்கள். நாங்களும் புதுமையான பயிற்சி வீடியோக்களை உருவாக்கி பதிவு செய்து வருகிறோம். இன்றைய சூழலில் எல்லோரும் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வது அவசியம். செய்திகளை பார்க்கும் போது சின்னச் சின்ன அக்காக்களை கொல்லுறாங்க.

அவர்கள் எல்லாம் இதுமாதிரி தற்காப்புக் கலைகள் கற்றிருந்தால் எந்த சூழலிலும் அவர்களால் தைரியமாக இருக்க முடியும். இது எங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது” என்றார்கள். தற்காப்புக் கலையில் தங்களது திறமைகளால் ஆட்சி செய்யும் இந்த இரட்டையர்கள் படிப்பிலும் படு சுட்டியாக இருக்கிறார்கள். தற்காப்பு பயிற்சிகள் ஒருபக்கம், வீடியோ தயாரிப்பு மறுபக்கம் என பிசியாக இருந்தாலும், படிப்பிலும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். தற்காப்புக் கலைகள் மட்டுமின்றி, பாரம்பரிய விளையாட்டுகள் சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள். “பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், சில்லுக்கோடு, தட்டாமலை, பூப்பறிக்க வருகிறோம், பச்சை குதிரை, பம்பரம், கிட்டிப்புள்... என பல பாரம்பரிய விளையாட்டுகள் எங்க வயதுள்ள குழந்தைகளுக்கு தெரிவதில்லை.  எல்லாரும் செல்போனில் தான் விளையாடுகிறார்கள்.

அது நமக்கு உடல் கேடு என்றாலும், அதில் இருந்து அவர்களின் கவனத்தை திருப்ப நம்முடைய பாரம்பரிய விளையாட்டு குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறோம். எங்களுக்கும் இந்த விளையாட்டு பற்றி தெரியாது. இந்த கொரோனா காலத்தில் பொழுதை கழிக்க வேண்டும் இல்லையா... எங்க பாட்டிதான் இந்த விளையாட்டுகளை எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அதையும் வீடியோவாக பதிவு செய்து வருகிறோம். விளையாட்டு துறையில் சாதனையாளர்களாக வரவேண்டும் என்பது தான் எங்க இருவரின் கனவு’’ என்று கூறும் இந்த இரட்டையர்களின் குழந்தைகளின் சாதனைகள் தொடரட்டும்.

Tags : Little Masters ,
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்