சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கினால் அவருக்கு நல்லது: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை: சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தால்தான் அவருக்கு நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் டி.பொன்னுரங்கம் இல்ல திருமணம் திருத்தணியில் நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், ரமணா, மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன், அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி, ஒன்றிய கவுன்சிலர் வேலஞ்சேரி த.சந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தால்தான் அவருக்கு நல்லது. அவரை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்திலேயே கட்சியிலிருந்து ஒதுங்கியே இருக்கிறேன் என எழுதி கொடுத்துள்ளார். மேலும் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த போது, நான் பொதுவாழ்வில் ஈடுபட போகிறேன் என கூறி வந்தவர், இப்போது கட்சியில் சேர துடிப்பது முடியாது. உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதில் அடிதடி மற்றும் சிக்கல் ஏற்படுத்தி இருந்தால், கட்சி தலைமையிடத்தில் புகார் மனு கொடுத்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கட்சி பெரியது. சிறுசிறு பிரச்னைகள் வருவது அண்ணன், தம்பி தகராறுதான். அதை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம். அடுத்த கட்டம் மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: