அயோத்தியா மண்டபத்தை மீட்கக்கோரி கடிதம் எழுதியவருக்கு பாஜவினர் கொலை மிரட்டல்: சங்க உறுப்பினர் போலீசில் பரபரப்பு புகார்

சென்னை: மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றவேண்டும் என்று கடிதம் எழுதிய தனக்கு ராம சமாஜம் மற்றும் பாஜ பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக, சங்க உறுப்பினர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்து அறநிலையத்துறை கைப்பற்றுவதற்கு ராம சமாஜம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த அமைப்பை சேர்ந்த 3 பேர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அந்த சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களில் ஒருவரான ரமணி (68) பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, கொளத்தூரில் நேற்று முன்தினம் இரவு நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:1954ம் ஆண்டு சமூக சேவையில் ஈடுபடுவதற்காக ராம சமாஜம் அமைப்பு தொடங்கப்பட்டது.

அந்த அமைப்பின் மூலம் நிறுவப்பட்ட அயோத்தியா மண்டபத்தில் 2004ம் ஆண்டு முதல் ஆஞ்சநேயர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி, உண்டியலில் காணிக்கை வசூலிக்கப்படுகிறது. சங்கங்களுக்கான பதிவு விதிகளை மீறி அயோத்தியா மண்டபத்தில் வழிபாட்டுடன், காணிக்கையும் வசூலிக்கப்பட்டதால், இந்து சமய அறநிலையத்துறை இதனை கைப்பற்ற வேண்டும், என கடந்த 2006ம் ஆண்டு நான் அரசுக்கு கடிதம் எழுதினேன். தற்போது, இந்து சமய அறநிலையத்துறை அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றியது செல்லும், என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ராம சமாஜம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன், உதவி செயலாளர் ராமதாஸ் மற்றும் சங்க உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இந்த மூவரில் ராமதாஸ்  பாஜவில் உள்ளார். ராம சமாஜம் அமைப்பு சமூக சேவைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் அல்லது நீதிமன்ற உத்தரவை ஏற்று தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். முழுக்க பிராமணர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ராம சமாஜம் சங்கத்தில் அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களும் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: