×

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பாஜ-விசிக பயங்கர மோதல்: போலீஸ்காரர் உட்பட 9 பேர் காயம்

சென்னை: கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பாஜ - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், போலீஸ்காரர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையம் அருகே உள்ள அவரது சிலைக்கு நேற்று காலை வைகோ, பிரேமலதா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, மாலை அணிவிக்க வருவதையொட்டி, அக்கட்சி நிர்வாகிகள் அந்த பகுதியில் கட்சி கொடிகளை நட்டனர். அதேபோல், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வருகைக்காக அங்கு பாஜ கொடி கம்பங்கள் நடப்பட்டன.

இந்நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த திருமாவளவன், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் பாஜ கொடி கம்பம் கீழே சாய்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் பாஜ கொடி கம்பங்களை தள்ளி விட்டதாக கூறி அக்கட்சியினர் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கற்களால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். மேலும், அங்கிருந்த கொடி கம்பங்களை பிடுங்கி, தாக்க முயன்றனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து, கலைந்து போகும்படி எச்சரித்தனர். இதையடுத்து, இரு தரப்பினரும் தனித்தனியே கோயம்பேடு நூறடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அங்கிருந்து கலைந்து போகும்படி கூறினர். அப்போது மீண்டும் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் பாஜ பிரமுகர்கள் அரிகிருஷ்ணன், செந்தில்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புதிய குமார், ரவி, போலீஸ்காரர் தர்மராஜ் ஆகிய 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் கராத்தே தியாகராஜன், காயத்ரி ரகுராம் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்றனர். இதனிடையே, கோயம்பேடு காவல் நிலையத்தில் பாஜ மற்றும் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மோதல் தொடர்பாக கோயம்பேடு போலீசார் பா.ஜ.வினர் 50 பேர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், கல்லெடுத்து மாறி மாறி தாக்குதல் உள்ளிட்ட  6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : BJP ,Vizika , Bajaj-Vizika terror clash: 9 injured, including policeman, in evening procession to Ambedkar statue
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு