×

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில், தேவாலயங்களில் சிறப்பு தரிசனம்: பக்தர்கள் குவிந்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்புத்தாண்டை முன்னிட்டு கோயில், தேவாலயங்களில் சிறப்பு தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோயில், தேவாலயங்களில் சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சி காமாட்சியம்மன், வரதராஜபெருமாள், ஏகாம்பரநாதர், கைலாசநாதர், அஷ்டபுஜ பெருமாள், வைகுண்ட பெருமாள், உலகலந்த பெருமாள், குமரக்கோட்டம் உள்பட 196 கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமஞ்சனம், சந்தனகாப்பும் நடந்தது.

செங்கல்பட்டு: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிங்கபெருமாள் கோயில் பகுதியில் உள்ள பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருக்கச்சூர் ஈஸ்வரன், புளிப்பாக்கம் ஈஸ்வரன், செங்கல்பட்டு ஈஸ்வரன், வேதாந்ததேசிக பெருமாள், கலெக்டர் அலுவலகம் அருகே சக்தி விநாயகர், செங்கல்பட்டு குழுந்தியம்மன், மறைமலைநகர் முருகன், நாகாத்தமன், செங்கல்பட்டு பச்சையம்மன், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர், மதுராந்தகம் ஏரிகாத்த ராமர், மாமல்லபுரம் தலசயன பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் உள்பட 150க்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாதா கோயில், மறைமலைநகர், கல்பாக்கம், கோவளம், செய்யூர் ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்போரூர்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு பங்குனி மாத நிறைவு நாளையொட்டி, திருப்போரூர் பகுதியில் உள்ள நான்கு மாடவீதிகளிலும் சிறப்பு பக்தி இன்னிசை கச்சேரிகளும், பஜனை பாடல்கள் பாடி ஊர்வலம் சென்றனர். மேலும், திருப்போரூர் திருமுருகன் திருப்படி திருவிழா திருச்சபை சார்பில் பிரணவமலையில் ஒவ்வொரு படியிலும் பக்தி பாடல்களை பாடி மலை மீது ஏறிச்சென்ற பக்தர்கள், மலை மீது உள்ள பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags : Kanchi ,Chengalpattu , Special darshan at temples and churches in Kanchi and Chengalpattu districts: Devotees flocked
× RELATED கருடன் கருணை