×

காஞ்சிபுரம் அருகே பரபரப்பு பைக் மீது லாரி மோதியதில் குழந்தையுடன் பெண் போலீஸ் பலி: கணவர் காயத்துடன் உயிர் தப்பினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் மகனுடன், பெண் காவலர் பலியானார். அவரது கணவர் காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தப்பிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த பனப்பாக்கத்தை சேர்ந்தவர் உமாதேவி (26). சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் ராஜா (30). எலெக்ட்ரீஷியன். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தர்ஷன் என்ற மகன் இருந்தான். நேற்று முன்தினம் இரவு உமாதேவி, பணி முடிந்தவுடன், தன்னை அழைத்து செல்லும்படி கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். அதன்படி ராஜா, மகன் தர்ஷனுடன் அங்கு சென்று மனைவியை அழைத்து கொண்டு பைக்கில் புறப்பட்டார்.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாலுசெட்டிச்சத்திரம் அருகே சென்றபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி, திடீரென 2 கார்கள் மீது மோதியது. மேலும் தறிக்கெட்டு ஓடி, உமாதேவி கணவருடன் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட உமாதேவி, அவரது குழந்தை தர்ஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். ராஜா, லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதை பார்த்ததும், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார். தகவலறிந்து பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், ராஜாவை சிகிச்சைக்காகவும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். வாகன விபத்தில் பெண் காவலர், கை குழந்தையுடன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

திருப்போரூர்: கேளம்பாக்கம் ராஜன் நகரை ஜீவரத்தினம் (41). கேளம்பாக்கம் அடுத்த செங்கண்மால்  கிராமத்தில் தனியார் சிமென்ட் கலவை நிறுவன சூபர்வைசர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஜீவரத்தினம், சாப்பிடுவதற்காக, வீட்டுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். செங்கண்மால் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Tags : Kanchipuram , Woman killed by police in truck collision with bike near Kanchipuram: Husband survives injury
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...