நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாததால் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு: அதிமுக, பாஜ மட்டும் பங்கேற்பு

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி, நேற்று மாலை அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புறக்கணித்தனர். அதிமுக, பாஜவினர் மட்டுமே பங்கேற்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி 14ம் தேதி (நேற்று) அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து அளித்து கவுரவிக்க திட்டமிட்டிருந்தார்.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், விவிஐபிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் விருந்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சி தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று காலை 11.20 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவியை, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடம் நடைபெற்றது.

சந்திப்பிற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வானது, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதோடு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் உரிமையை அடியோடு தட்டிப்பறிப்பதாக அமைந்துள்ளது. இதனால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை அமைந்திட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. இந்த அடிப்படையில் தான் முன்னாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் இதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், ஒன்றிய அரசிற்கு அதை அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக 142 நாட்கள் சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் வைத்திருந்தார். பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து அதை மீண்டும் அவர் அரசிற்கு அனுப்பி வைத்தார். அவர் திருப்பி அனுப்பிவைத்த பிறகு, முதல்வர் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி தமிழக சட்டமன்றத்தை கூட்டி அதே சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, அது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு முறையும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு பின்னரும் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, மார்ச் 15ம் தேதி முதல்வர், கவர்னரை நேரில் சந்தித்து இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது, ‘தான் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக’ கவர்னர் உறுதியளித்தார். உறுதியளித்த பின்னரும் தொடர்ந்து கவர்னர் அனுமதி வழங்கவில்லை. ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் இருந்தது. கடந்த 31ம் தேதி முதல்வர் டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து நீட் மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையை சுட்டிக்காட்டினார். வரக்கூடிய கல்வியாண்டிலேயே மாணவர்களை சேர்ப்பதற்கான தேதி நெருங்கி வருகிறது. எனவே, அதற்கு முன்பாக முடிவெடுத்து இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். 208 நாட்கள் கடந்த பின்னரும் கூட கவர்னர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் சட்டமன்றத்திற்கு இருக்கக்கூடிய மாண்புகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்று (நேற்று) காலை முதல்வரின் உத்தரவின் பேரில் கவர்னரை சந்தித்து மசோதாவிற்கு உரிய ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். ஆனால், கவர்னர் மசோதாவை ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைக்க எந்த ஒரு காலவரையறையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. கவர்னர், ஒன்றிய அரசிற்கு அனுப்பிவைத்து பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதல் வந்தால் தான் வரக்கூடிய கல்வி ஆண்டிலாவது 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர முடியும். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த சந்திப்பின்போது, மசோதாவை கவர்னரின் ஒப்புதலோடு ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைக்க கவர்னர் எந்தவிதமான உத்தரவாதத்தையும் எங்கள் இருவர் இடத்திலும் அளிக்கவில்லை.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை, கிராமப்புற ஏழை,எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகளை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மாண்பினை கருத்தில் கொள்ளாமல், ஏற்றுக்கொள்ளாமல் மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இதேபோன்ற நிலை தான் கூட்டுறவு சங்க மசோதாவிலும் நீடிக்கிறது. இதை எடுத்துச்சொல்லியும் உத்தரவாதத்தை கவர்னர் வழங்கவில்லை. எனவே, இன்று (நேற்று) மாலை கவர்னர் மாளிகையில் நடக்க உள்ள தேநீர் விருந்து நிகழ்விலும், தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் நாங்கள் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு  சென்னை கவர்னர் மாளிகையில், தமிழக கவர்னர் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வைத்த தேநீர் விருந்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மமக, கொமதேக, தவாக மற்றும்  உள்ளிட்ட தலைவர்கள்  மற்றும் அக்கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல பாமகவும் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம், தமிழக பாஜ  தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் முருகன், மற்றும் குஷ்பு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னதாக, நேற்று மாலை 5 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். தமிழக கவர்னர் அளித்த விருந்தை, பெரும்பாலான தமிழக கட்சிகள் புறக்கணித்து விட்ட நிலையில், அதிமுக மற்றும் பாஜ மட்டும் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: