×

ஆந்திர மாநிலம் அக்கி ரெட்டி கூடேம் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 10 பேர் கவலைக்கிடம்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் அக்கி ரெட்டி கூடேம் அருகே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது. இந்த தொழிற்சாலையில் 4-வது யூனிட்டில் 18 பேர் நேற்று இரவு வேலை செய்து கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் தொழிற்சாலை யூனிட்டில் இருந்து நைட்ரிக் ஆசிட் திடீரென கசிந்து தீ பிடித்தது. பற்றி எரிந்த தீ வேகமாக பரவியது. அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் 4-வது யூனிட் முழுவதும் மேலும் தீ பரவி பற்றி எரிந்தது.

தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். 4 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தீ விபத்து குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஏலூர் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 14 தொழிலாளர்களை மீட்டு விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்தது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். 


Tags : Aki Reddy Goodam ,AP , Andhra Pradesh, Chemical factory, fire, 6 dead
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...