×

விருதுநகரில் அதிர்ச்சி மின்னல் தாக்கி பெண் உள்பட 4 கட்டிட தொழிலாளர்கள் பலி: கள்ளக்குறிச்சியில் 2 பேர் சாவு

விருதுநகர்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது கோடைமழை கொட்டி வருகிறது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. விருதுநகர் மல்லிக்கிட்டங்கி தெருவை சேர்ந்த சதீஷ்குமார், பேராலி ரோடு கருப்பசாமி நகரில் புதிய வீடு கட்டி வருகிறார். நேற்று மாடியில் தண்ணீர் தொட்டி கட்டும் வேலை நடந்துள்ளது. கட்டுமான பணியில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி பூச்சு வேலையில் இரு கொத்தனார்கள் ஈடுபட்டுள்ளனர். பூச்சு வேலைக்கு தேவையான சிமென்ட் கலவையை ஜெயசூர்யா (22), ஜக்கம்மாள் (58), கார்த்தி ராஜா (28), முருகன் (24) ஆகிய 4 பேர் சாரத்தில் நின்று கொடுத்துள்ளனர். மாலையில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் துவங்கியது. அப்போது, மின்னல் தாக்கியதில் ஜெயசூர்யா, ஜக்கம்மாள், கார்த்தி ராஜா, முருகன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொட்டிக்குள் பூசும் பணியில் இருந்த சங்கிலி, மகேந்திரன் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை எஸ்பி மனோகர் நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தை சேர்ந்த ஜெயக்கொடி(55) என்பவர் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்து பலியானார். பண்ருட்டியை சேர்ந்த சீனிவாசன்(48) என்பவர் கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் கிராமத்தில் அண்ணாமலையார் கோயில் புதுப்பிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தார். நேற்று இடிமின்னலுடன் மழை பெய்தபோது கோயில் அருகில் நின்று கொண்டிருந்த சீனிவாசன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். அதே கோயில் கட்டுமான பணியில் ஈடுப்பட்டிருந்த புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் அமர்நாத்(23) என்பவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குமரி: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ரப்சேல் (47) என்ற மீனவர் மின்னல் தாக்கி இறந்தார்.

Tags : Awardhakiri ,Kakalakuruchi , Virudhunagar, shock, lightning, workers killed,
× RELATED கள்ளக்குறிச்சி காவல் துணை...