உலகம் முழுவதும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் ‘பீஸ்ட்’ வெளியானது: தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் நேற்று திரைக்கு வந்தது. படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் விழாக்கோலம் காணப்பட்டது. ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பட்டாசுகள் வெடித்து படத்தின் ரிலீசை கொண்டாடினர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே,  செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி. கணேஷ், ஷாஜி சென் உள்பட பலர் நடித்துள்ளனர். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து படத்துக்கான எதிர்பார்ப்புகள் கூடியது. தொடர்ந்து பாடல்கள் வெளியாகி, சூப்பர் ஹிட்டானது. படத்தின் டிரெய்லர் டிவிட்டரில் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. யூ டியூப்பில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. படம் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, உலகம் முழுவதும் நேற்று படம் திரைக்கு வந்தது. தமிழகத்தில் படம் வெளியான தியேட்டர்களில் விழாக்கோலமாக காட்சி அளித்தது.

விஜய்யின் பிரமாண்ட கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது. அதிகாலையிலேயே தியேட்டர்கள் முன் ரசிகர்கள் குவிந்தனர். பட்டாசுகள் வெடித்தும் தாரை தப்பட்டை முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் பீஸ்ட் படத்தின் ரிலீசை ரசிகர்கள் கொண்டாடினர். சென்னையில் சத்யம், தேவி, சங்கம், ஈகா, காசி, உட்லண்ட்ஸ், ஆல்பர்ட், ஐநாக்ஸ், உதயம், கமலா, ஏஜிஎஸ், பாரத், ரோகினி உள்பட அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் படத்தை பார்க்க அதிகாலையிலேயே திரண்டனர். நேற்று பீஸ்ட் படத்தின் அனைத்து காட்சிகளிலும் தியேட்டர்கள் நிரம்பி வழிந்தது. படத்தில் விஜய்யின் ஸ்டைல், வசனங்கள், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் தங்களை கவர்ந்ததாகவும் படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் சிறப்பாக இருப்பதாகவும் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் கூறினர்.

தியேட்டர்களில் படம் ஓடும்போது, ‘அரபிக்குத்து’ பாடலுக்கு ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஆட்டம் போட்டனர். சமூக வலைத்தளங்களிலும் பீஸ்ட் படத்தை பாராட்டி நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டனர். இதேபோல் மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர், நெல்லை, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர்கள் முன்பு ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் கலைஞர்களின் நடனத்துடனும் பட்டாசுகள் வெடித்தும் படத்துக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பீஸ்ட் படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆவலுடன் கண்டுகளித்தனர். இலங்கை யாழ்ப்பாணத்திலும் தியேட்டர்களில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். விஜய்யின் ஸ்டைலுக்கு ஏற்ப படம் ஆக்‌ஷனும் குடும்ப ரசிகர்களை கவரும் விதமாக நல்ல கதையம்சமும் நிறைந்து இருப்பதாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: