செல்போன் பறித்த கொள்ளையனை துரத்தி பிடித்த மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டிய போலீஸ் கமிஷனர்

சென்னை: செல்போன் பறித்து தப்பிக்க முயன்ற கொள்ளையனை துரத்தி பிடித்த 2 கல்லூரி மாணவிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை அடுத்த கல்பாக்கம் பகுதியை சேர்ந்த காயத்ரி(19), பெருங்களத்தூரை சேர்ந்த தீபலஷ்மி(19) ஆகியோர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாமாண்டு படித்து வருகின்றனர். இருவரும் தடகள விளையாட்டு விராங்கனைகள் என்பதால் கடந்த 8ம் தேதி பயிற்சிக்காக பெரம்பூர் லோகோ ரயில்நிலையத்தில் இறங்கி பயிற்சி மையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் காயத்ரியின் செல்போனை பிடுங்கி கொண்டு, பைக்கில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பி செல்ல முயன்றார். செல்போனை பறிகொடுத்த காயத்ரி மற்றும் தீபலஷ்மி ஆகியோர் கொள்ளையனை துரத்தி சென்று பொதுமக்கள் உதவியுடன் பிடித்து பெரவள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இரண்டு கல்லூரி மாணவிகளையும் போலீஸ் கமிஷனர் சங்கல் ஜிவால் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

 அதேபோல், மெரினா கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை மீட்ட ஆயுதப்படை காவலர் சுதாகர், புளியந்தோப்பு பகுதியில் குற்றப்பின்னணியில் உள்ள நபரை கைது செய்த தலைமை காவலர் கருப்பையா, பெரியமேடு பகுதியில் நகை வியாபாரியை தாக்கி நகைகளை பறித்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் முனியசாமி, தலைமை காவலர் ஜெயகுமார், ராஜேஷ், சந்திரன், முதல் நிலை காவலர்கள் மாதேஸ்வரன், துரைபாண்டி, கண்ணன் ஆகியோரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு சான்றிதழ் வாங்கினார்.

Related Stories: