×

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்: மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை; சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும். மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன். அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவை; எதிர்காலத்திற்கு ஒளிவிளக்கு அது.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை ‘சமூகநீதி நாளாக’ அறிவித்தது போல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.   

இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும். அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அண்ணலுடைய முழு அளவு வெண்கலச் சிலையை நிறுவ வேண்டுமென்ற கோரிக்கையையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்தார். அந்தக் கோரிக்கையையும் ஏற்று, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா, பெரியாருடைய நூல்களை 21 மொழிகளில் மொழி பெயர்த்ததைப் பாராட்டியதோடு, அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைத் தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்துப் புதுப்பிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக அரசால் அண்ணலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும். சமூகநீதியின் நோக்கம் சமத்துவத்தை அடைவதே என்பதையும், இவ்விரண்டும் நம் இலக்கின் இரண்டு கண்கள் என்பதையும் இந்த மாமன்றம் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டமே அறியும். தமிழர்கள் அனைவரும் உயர்ந்த நிலையை அடைய, எத்தகைய விண்ணப்பம் வந்தாலும், அதை உடனே பரிசீலித்து ஆவன செய்கிற ஆட்சிதான் இப்போது நடக்கிறது என்பதைத் தெரிவித்து, இந்தளவில் இந்த அறிவிப்பை நிறைவு செய்து அமைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டப்பேரவை எதிர் கட்சி துணை தலைவர் ஒ.பன்னீர் செல்வம், செல்வ பெருந்தகை(காங்கிரஸ்), வானதி சீனிவாசன் (பாஜ), ஜி.கே.மணி(பாமக), சதன்  திருமலை குமார் (மதிமுக), சிந்தனை செல்வன்(விசிக), பூவை ஜெகன் மூர்த்தி(புரட்சி பாரதம்), வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது(மமக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), நாகைமாலி(மார்க்சிஸ்ட்)  ஆகியோர் பேசினர். இதற்கிடையில், ‘அம்பேத்கருடைய பிறந்த நாளான ஏப்ரல்  14ம் நாள், ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு  அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள்’ உறுதிமொழியை அனுசரிக்க முடிவு செய்து அரசு  ஆணையிடுகிறது’ என தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ambedkar ,Equality Day ,Mani Mandapam ,Chief Minister ,MK Stalin , Ambedkar's birthday, April 14, is celebrated as Equality Day: a full - length bronze statue in the Mani Mandapam; Announcement by Chief Minister MK Stalin in the Assembly
× RELATED சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...