தென் தமிழகம், டெல்டாவில் 17ம்தேதி வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென் மேற்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாகவும் கேரள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள மழை மேகம் கேரளா முதல் வட தமிழகம் வரை பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நேற்று தாராபுரத்தில் 150 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆய்குடி 120 மிமீ, சங்கரன்கோவில் 110 மிமீ, தென்காசி 100 மிமீ, சிவகிரி 80 மிமீ, பாம்பன் 70 மிமீ, நாங்குநேரி 60 மிமீ, திருவாரூர், சோழவந்தான், பெருஞ்சாணி அணை, ராதாபுரம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தக்கலை 50 மிமீ, முத்துப்பேட்டை, வைகை அணை, வாடிப்பட்டி, மேட்டுப்பட்டி, நத்தம், செங்கோட்டை, பட்டுக்கோட்டை, தேனி 40 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. தவிரவும், கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், டெல்டா மாவட்டங்களில் 17ம் தேதி வரை மழை நீடிக்கும். சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: