திண்டுக்கல் அருகே கார் லாரி மோதி விபத்து நிறைமாத கர்ப்பிணி காவலர் பலி-கணவர் படுகாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், நிறைமாத கர்ப்பிணியான பெண் போலீஸ் பரிதாபமாக பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). முசிறி காவல்நிலைய போலீஸ்காரர். இவரது மனைவி திண்டுக்கல் வக்கம்பட்டியைச் சேர்ந்த சுகந்தி (27). நிறைமாத கர்ப்பிணியான இவர், திருச்சி காட்டுப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கணவன், மனைவி இருவரும் வக்கம்பட்டியில் உள்ள சுகந்தியின் பெற்றோர் வீட்டிற்கு, காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை சதீஷ்குமார் ஓட்டி வந்தார். அருகில் சுகந்தி அமர்ந்திருந்தார்.திண்டுக்கல்  வத்தலக்குண்டு பைபாஸ் ரோடை அடுத்த, ஏபி நகர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் முகம் சிதைந்து படுகாயம் அடைந்த சுகந்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சுகந்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரும், அவரது வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் இறந்ததாக தெரிவித்தனர். படுகாயமடைந்த சதீஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, எஸ்ஐ விஜய் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு, தப்பிச் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் கர்ப்பிணி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: