×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம்-கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல்

ராணிப்பேட்டை : ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 98 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது’’ என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்து அடையாள அட்டைகளை உடனடியாக வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார். உடல்நிலை பாதித்த மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இருசக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவற்றை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் முகாம் குறித்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் அறிவுரையின்படி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்ட அளவில் 30 முகாம்களும், பிர்கா அளவில் 18 முகாம்களும் நடத்தப்பட்டு 5500 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 7769 மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர். 3350 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கை, கால்கள் இழந்த 36 பேருக்கு செயற்கை கை, கால்கள் வழங்க அளவீடு செய்யப்பட்டுள்ளது. 86 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டவும், 275 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. செவித்திறன் குறைபாடு கற்றல் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு முதல்அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் காக்லியர் இம்ப்ளான்ட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க கர்ப்பிணிப் பெண்கள் காலம் தவறாமல் உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். டாக்டர்கள் கூறும் உணவுப் பழக்கம், பயிற்சிகள் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். உடல் நல பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பை தடுக்க குடும்ப உறவுகளுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு 12 ஆயிரம் நபர்கள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவச தையல் பயிற்சி அளித்து துணிப்பைகள் தைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 98 தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. தாய்மார்கள் தைக்கும் மஞ்சள் பைகளுக்கான தொகை வியாபாரிகள் மூலமாக பெற்று வழங்கப்படும். மேலும், சோப்பு தயாரித்து விற்கவும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் இருளர் சமுதாய மக்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சுயதொழில் தொடங்க உதவி, நிலப்பட்டா ஆகியவை வழங்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ₹3 லட்சமும், இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ₹5 லட்சம் மற்றும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் வாலாஜாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆரம்ப நிலையிலேயே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.

Tags : Ranipettai district , Ranipettai: To provide sewing machines to the mothers of 98 mentally retarded children in Ranipettai district.
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...