×

வாழ்வென்பது பெருங்கனவு!

கண்ட கனவுகளும்  நிஜமாகியவையும்!

முனைவர் ஸ்ரீரோகிணி

‘‘கடல் கடந்து வாழ்ந்து வந்தாலும், கட்டுக்கடங்காத திருக்குறள் மோகம் எத்தனை ஜென்மங்களுக்கும் என்னை விட்டு அகலாது’’ என திருவாய் மலரும் முனைவர் ஸ்ரீரோகிணிக்கு, திருக்குறளை வெண்பாவாக இயற்ற வேண்டும் என்பது நீறுபூத்த நெருப்பாக தகிக்கும் கனவாகும். இதுவரை யாருமே முயற்சிக்காத வித்தியாசமான இந்த முயற்சி வெற்றி பெறும் என உறுதிபடக் கூறும் முனைவர் ஸ்ரீரோகிணிக்கு, நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்.. எனும் தமிழ்த்தாய் வாழ்த்து போல, திருக்குறளும் வெண்பாவாக அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம் பெற வேண்டும் என்பதே பெருங்கனவாக இருக்கிறது. அதற்காக அவர் துபாய் நாட்டில் இருந்தபடி, வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ள திருக்குறள் குறித்து உலகத்தமிழர்கள் எந்தளவு ஆர்வமாக உள்ளனர், எப்படி அவர்களை ஊக்குவிப்பது என ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். அவரது ஆராய்ச்சியை மேலை நாடுகளில் ஆய்வு செய்து திருக்குறள் வெண்பாவை அங்கீகரித்தால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிகராக திருக்குறளை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆயுத்தமாகிவிடுவார் என்பது மறுக்க முடியாத உண்மை.

“பிறந்தது ஈரோடு மாவட்டம். திருமணத்திற்குப் பின் துபாயில் வசிக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் மேடைப்பேச்சாளராக, எழுத்தாளராக, சொற்பொழிவாளராக, ஆய்வாளராக என பல வேலைகளில் நான் ஈடுபட்டு வந்தேன். அதற்கு பல நற்சான்றுகள், விருதுகள், பாராட்டு கள் என எந்த ஒரு தடையும் இன்றி தானாகவே வந்து சேர்ந்தன. நான் பெற்ற அனைத்து விருதுகளும் என் பெற்றோரையே சாறும். குழந்தை பருவத்திலேயே என்னை முதன்முதலில் தூண்டிவிட்டவர் தந்தை தான். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். மத்திய கூட்டுறவு வங்கியில் எழுத்தர் பணிக்கு சேர்ந்து படிப்படியாக பொது மேலாளர் என்னும் அந்தஸ்து வரை உயர்ந்தவர். அவருக்கு தமிழ் மீது அலாதி பற்று. குறிப்பாக உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறள் மேல் அவருக்கு அதிகப்பற்று.
இந்த இடத்தில் எனக்கு திருக்குறள் மீது பிடிப்பு ஏற்பட அமைந்த சிறப்பான ஒரு காரணத்தை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் என்ற நடவடிக்கைகள் தொடங்கி பன்னாட்டு உணவு நிறுவனங்கள் நம் மக்களின் உணவு கலாசாரத்தை ஜங்க் வகைக்கு மாற்றி விட்டனர். ஆனால், 30 ஆண்டுக்கு முன், மூன்று வேளையும் அரிசி சாப்பாடுதான் என்றிருந்த நமது கலாசாரத்தில் குறிப்பிட்ட சில சமுதாயத்தில் மட்டும் சிற்றுண்டி என்பது ஒருவேளை உணவாக இருந்தது. எனவே, நம்ம வீட்டிலும் காலையில் இட்லி, தோசை செய்ய மாட்டார்களான்னு ஆசையாக இருக்கும். அதிலும், நான்கு வயதில் இட்லி சாப்பிடவேண்டும் என்பது எனது தீராத கனவாக இருந்தது. என்னுடைய ஆசையை புரிந்து கொண்ட அப்பா எனக்கு அதற்கு ஒரு சவாலினை எடுத்து வைத்தார். அவர் ‘‘ஒரு திருக்குறள் ஒப்பித்தால் ஒரு இட்லி’’ என்றார். நான் 2 குறள் மனப்பாடமாக ஒப்பித்து 2 இட்லி சாப்பிடுவேன். ஆக, இட்லி தான் என்னை திருக்குறளைப் படிக்க தூண்டியது என்பது உண்மை’’ என்றவருக்கு மேடைப்பேச்சுகளிலும் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது.

‘‘அப்பாவின் தமிழ்ப்பற்று திருக்குறளைத் தாண்டி மேடைப் பேச்சிலும் வெளிப்பட்டது. அவர் விடுமுறை நாட்களில் மேடைப் பேச்சுகளில் கலந்து கொண்டு பேசுவார். உடன் என்னையும் அழைத்து செல்வார். அவர் பங்குபெற்ற பல மேடை நிகழ்ச்சிகளை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அதே போல் நாமும் மேடை ஏறி பேச வேண்டும் என்ற தாக்கம் என்னுள் ஏற்பட்டது. அப்பாவும், அதற்காக என்னை தயார் படுத்தினார். அதே சமயம் மொழி அல்லது இலக்கிய களம் என எதுவாக இருந்தாலும் அதனை யார் மீதும் திணிக்கக் கூடாது. இயல்பிலேயே ஆர்வம் அமைய வேண்டும் என்பது அவரின் கொள்கை. எனக்கு தமிழ் மேல் ஆர்வம் இருப்பதை அறிந்து அதற்காக என்னை பழக்கினார்’’ என்றவர் தன்னுடைய பத்தாவது வயதிலேயே அனைத்து குறள்களையும் மனப்பாடமாக பொருளறிந்து பயின்றுள்ளார்.

‘‘திருக்குறளை போன்ற வாழ்வியல் சார்ந்த வேறு எந்த நூலும் இல்லை என்ற கருத்து என்னுள் திடமாக ஊன்றிவிட்டது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், மாவட்ட அளவில் தாய் மொழி இலக்கியத்தில் உலக சாதனை போட்டி பள்ளியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் 1,330 குறளையும் கணீரென ஒலித்தேன். முடித்ததும், பலத்த கைதட்டலுக்கு இடையே மேடையில் இருந்து இறங்க முயற்சித்த போது, போட்டியாளர்கள் என்னை நிறுத்தி, ஒரு சில குறளுக்கு பொருள் கேட்டனர். அசராமல் விளக்கம் அளித்தேன். ஆனால் எனக்கு அந்த போட்டியில் முதல் பரிசுக்கு வேறு ஒரு மாணவியின் பெயர் அறிவிக்கப்பட்டது. எனக்காக பள்ளிக்கு வந்திருந்த அப்பா, ‘‘இவங்க பரிசு கொடுக்கலன்னா என்ன.. நான் மெடல் வாங்கித் தர்றேண்டா செல்லம். வா வீட்டுக்கு போகலாம்’’ என்றார். அப்பா என்னை சமாதானம் செய்தாலும், மனசுக்குள் கஷ்டமாக இருந்தது.

வருத்தத்துடன் அரங்கத்தை விட்டு வெளியேறும் போது, மைக்கில், ‘‘சிறிய திருத்தம். முதல் பரிசு பெற்ற மாணவியை தவறாக அறிவித்துவிட்டனர். எனவே முதல் பரிசு ஸ்ரீரோகிணிக்கு செல்கிறது’’ என அறிவித்தனர். இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனேன். அப்படித்தான் திருக்குறள் என்ற விதை எனக்குள் விதைத்தது. இன்று விருட்சமாக தழைத்து ஓங்கி உள்ளது’’ என்றார். இவரின் தாத்தாவும் தமிழுக்காக பல சேவைகளை செய்துள்ளாராம். ‘‘என்னுடைய தாத்தாவும் தமிழ் மீது அளவில்லா பற்றுக் கொண்டவர். அவர் கணினி, தொலைபேசி, கைப்பேசி இல்லா காலத்தில் தன் ஜப்பான் நண்பருடன் இணைந்து கடிதம் வாயிலாக நம் திருக்குறள், அபிராமி அந்தாதி போன்ற பல தமிழ் நூல்களை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்தார். தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை கண்டு ஜப்பான் அரசு இவரது புகைப்படத்தை அந்நாட்டின் தபால் தலையாக வெளியிட்டு பெருமைப்படுத்தியது.அவருக்கும் என்னுடைய தமிழ் பற்று வளர முக்கிய பங்குள்ளது.

கல்லூரி படிக்கும் போது, எனது இலக்கிய வட்டாரம் விரிவடைந்தது. மேடை பேச்சுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். பரிசுகளும் வென்றேன். திருக்குறள் ஸ்ரீரோகிணி என எனக்கொரு அடையாளம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான் வாழ்வியலை முற்றிலும் புரிய வைக்கும் இலக்கியம் உலகில் திருக்குறளைத் தவிர வேறு எதிலும் இல்லை என தெரிந்தது. பேச்சாற்றலும் அதிகரித்ததால், முன்பைக் காட்டிலும் எனது திருக்குறள் விளக்க உரைக்கு மதிப்பு கூடியது.  இதனிடையே அரசு தேர்வு எழுதிய எனக்கு தாராபுரம் பொதுப்பணித் துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணி கிடைத்தது. தகவல் தொழில்நுட்பம் படித்த எனக்கு அந்த பணியில் இரண்டு ஆண்டுக்கு மேல் பிடிப்பு ஏற்படவில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வாரம் ஐந்து நாட்கள் வேலை செய்தாலும், வார இறுதி நாட்கள் என்னுடைய திருக்குறள் பணிக்காக ஒதுக்க ஆரம்பித்தேன்.

அனாதை ஆசிரமங்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகளுக்குச் சென்று திருக்குறள் கற்பிக்க ஆரம்பித்தேன். அப்படி செல்லும் போது, போதிய வசதி இல்லாமல், படிப்பை தொடர முடியாமல் இருந்த பல மாணவ மாணவியர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவி அவர்களை படிக்க வைத்தேன். என் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களும், என்னுடன் இணைந்து தோள் கொடுக்க முன்வந்தார்கள். இதனிடையே திருமணம். கணவருக்கு துபாயில் வேலை என்பதால் கடல் கடந்தேன். அங்கு சென்றும், அங்குள்ள இலக்கிய தொடர்புகளுடன் நட்பை வளர்த்துக் கொண்டேன். திருக்குறள் மற்றும் விளக்க உரை என மேடையில் முழங்குவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை உணர்ந்தேன்.

அதனால் அடுத்து என்ன என யோசிக்கத் தொடங்கினேன். அப்போது தான் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முனைவர் கோவிந்தராசன் அவர்கள் தலைமையில் ஆய்வு படிப்புக்கு அனுமதி கிடைத்தது. முனைவர் பட்டமும் பெற்றேன். சார்ஜா 38-வது உலகப் புத்தக கண்காட்சியில் எனது ‘மகிழ்ந்திரு’ நூல் வெளியிட்டேன். இந்த கின்னஸ் சாதனை நிகழ்வில் என் புத்தகமும் ஒன்று என்பது பெருமகிழ்ச்சி. 1,330 குறளையும் அனைவரும் சிந்தையில் பதித்துக் கொள்வது மிகவும் கடினம். அதே சமயம் குறளையோ அதன் வித்தகர் வள்ளுவனையோ மறக்கவும் கூடாது. எனவே, திருக்குறள் தொடர்பான வெண்பா உருவாக்கி அதனை அரசு விழா மேடைகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து ஒலிபரப்பச் செய்வது என தீர்மானித்தோம். அதன்படி தமிழர்களிடம் இப்போது திருக்குறள் ஆர்வம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

உலக தமிழர்களிடையே குறள் குறித்த கணக்கெடுப்பு ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறேன். இதற்காக கம்போடியா, ஜெர்மன், பிரான்ஸ் என எனது திருக்குறள்
பயணம் தொடர்கிறது. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு பெண்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கனவு இருக்கும்.  அது தானாக ஒரு காட்சியாக மாறும், அந்தக் காட்சி தக்கசமயத்தில் லட்சியமாக உருவெடுக்கும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல், உயர்நிலை சிந்தனையோடு ‘அடுத்தது என்ன’ என்ற முனைப்புடன் பெண்கள் தங்களின் லட்சியத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும்’’ என்கிறார் முனைவர் ஸ்ரீரோகிணி.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!