×

தென் ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்துள்ள 2 புதிய வகை கொரோனா கிருமிகள் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

டர்பன் : உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்துள்ள 2 புதிய வகை கொரோனா கிருமிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வகை கொரோனா, தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் ஓமிக்ரான் எக்ஸ்இ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் மேலும் 2 புதிய வகை கொரோனா கிருமிகளை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அவற்றிற்கு பிஏ 4 மற்றும் பிஏ 5 என பெயரிட்டு அதன் பரவும் தாக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புதிய வகை கொரோனா கிருமிகள் தீவிரமாக பரவுவமா என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாது பெல்ஜியம், ஜேர்மனி, டென்மார்க், போட்ஸ்வானா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இந்த 2 வகை கொரோனா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தென் கொரிய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பிஏ 4 மற்றும் பிஏ 5 ஆகிய கிருமிகளின் இயல்புகள் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள், விரைவில் அதன் முடிவுகள் சர்வதேச மருத்துவ ஆய்வு இதழ்களில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர். உலகம் முழுவதும் டெல்டா, ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மேலும் 2 புதிய வகை கொரோனா கிருமிகள் கண்டறியப்பட்டு இருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : South Africa , South Africa, Genetic modification, corona, germs, scientists
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...