×

சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகள், பூம்புகார் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.4.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகள், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகள் ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு  மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ எனும் விருது வழங்கப்படுகிறது. கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும், அதன்மூலம் திறனை வெளிகொணர்ந்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் இவ்விருது ஆண்டு தோறும் 15 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக இவ்வாண்டு 10 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் மொத்தம் 10 நபர்களுக்கு 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழுடன் ஒரு இலட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.     

அதன்படி, 2021-22ஆம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகள் திரு. ஜி. மாரிமுத்து (தஞ்சாவூர் கலைத் தட்டு), திரு. என். மாரியப்பன் (தஞ்சாவூர் ஒவியம்), திரு. ஜி. தங்கரா#& (வீணை கைத்திறத் தொழில்), திரு. பொன். விசுவநாதன் (பஞ்சலோக சிற்பம்), திரு. எம். இராமலிங்கம் (காகிதக் கூழ் பொம்மை), திரு. எம். முத்துசிவம் (கோவில் நகைகள்), திருமதி வி. கமலம் (இயற்கை நார் பொருட்கள்), திரு. டி. விஜயவேலு (சுடுகளிமண் பொம்மைகள்), திரு.எஸ். பிரணவம் ஸ்தபதி (பஞ்சலோக சிற்பம்), திரு. கே. வடிவேல் (கடல் சிப்பி பொருட்கள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.    

“பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டு தோறும் 12 இலட்சம் ரூபாய் மதிப்பில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.  இவ்விருதுகள் 50,000/- ரூபாய் பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழும் கொண்டதாகும்.

அதன்படி, 2021-22ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை, திரு. டி. கதிரவன் (மரச்சிற்பம்), திரு. ஏ. தென்னரசு (தஞ்சாவூர் ஓவியம்), திரு. எஸ். சகாயராஜ் (மரச்சிற்பம்), திரு. ஆர். கோபு (பஞ்சலோக சிலை), திரு.எஸ். யுவராஜ் (மரச்சிற்பம்), திரு.எஸ். ராதா (நெட்டி வேலை), திரு. டி. நாகப்பன் (கற்சிற்பம்), திருமதி டி. மகேஸ்வரி (காகிதக் கூழ் பொம்மைகள்), திரு.என். ராஜேந்திரன் (வீணை கைத்திறத் தொழில்), செல்வி டி. செல்லம்மை (இயற்கை நார் பொருட்கள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.    

மேலும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், காஞ்சிபுரம் மாவட்டம் - கலியனூர் (காகிதக்கூழ் பொம்மைகள்), திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் (மரவர்ணக் கடைசல்), பெரம்பலூர் மாவட்டம் - அரும்பாவூர் (மரச்சிற்பங்கள்), ஈரோடு மாவட்டம் - ஆசனூர் (ஒன்னிக்குச்சி கைத்திறத் தொழில்), சேலம் மாவட்டம் - தம்மம்பட்டி (மரச்சிற்பங்கள்), விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி (சுடுகளிமண் கைத்தொழில்), திருநெல்வேலி மாவட்டம் - பத்தமடை (பத்தமடை பாய்) ஆகிய இடங்களில் கைவினைஞர்களின் நலனுக்காக 3 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7 பொது பயன்பாட்டு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.   
இந்த பொது பயன்பாட்டு மையங்களில் கைவினை குழுமங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் ஒன்று கூடி, இங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி, கைவினைப்பொருட்களை எளிதாகவும், விரைவாகவும் தயாரித்து, விற்பனை செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம். மேலும், நலிந்த கைவினைத் தொழில்களான சுடுகளிமண் மற்றும் பத்தமடைபாய் போன்ற கைவினைத் தொழில் செய்யும் கைவினைஞர்களுக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பொது பயன்பாட்டு மையங்கள் விக்கிரவாண்டி மற்றும் பத்தமடையில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின் மூலம் சுமார் 5,000 கைவினைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி வி. ஷோபனா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Stalin ,Living Handicraft Treasure Awards ,Poompuhar Awards , Craftsman, Treasure, Awards, Poompuhar
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...