வயிற்று வலிக்கு 2 மாதங்களாக எச்.ஐ.விக்கு சிகிச்சை:அரசு மருத்துவமனையில் அவலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வயிற்று வலி என்று வந்தவருக்கு இரண்டு மாதங்களாக எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது நயினார்கோவில் அந்த கிராமத்தில் வசித்து வருபவர் இருளப்பன் (52) வயதான விவசாயி இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் அவருக்கு குணமாகவில்லை இதையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார் அங்கு அவருக்கு ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அவர்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். மேலும் எய்ட்ஸ் நோய்க்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வந்துள்ளனர். எய்ட்ஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்தும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.

இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்றுவலிக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்றும், அந்த விவசாயி எய்ட்சால் பாதிக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதைக்கேட்டு விவசாயி ஆனந்தம் அடைவதா? அதிர்ச்சி அடைவதா? என்று குழம்பியுள்ளார். பின்னர் அவருக்கு பித்தப்பையில் கல் உள்ளதாகவும் அதன் காரணமாகவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறினர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பித்தப்பை கல் அகற்றப்பட்டது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று அந்த விவசாயி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மீண்டும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்று கூறியுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனக்கு எச்.ஐ.வி. இருப்பதாகவும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினீர்கள் 2 மாதங்களுக்குள் எப்படி குணமானது? உங்களால் 2 மாதங்களால் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன் என்று தெரியுமா? என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும், இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளவும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. இதன்காரணமாக நோயாளிகள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து கல்லூரி டீனிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் தங்களது கவனத்திற்கு இந்த விவகாரம் வரவில்லை என்றும் அவ்வாறு நடந்திருந்தால் இது மிகப்பெரிய தவறு என்றும் இதுகுறித்து கண்டிப்பாக விசாரிப்போம் என்றும் கூறியுள்ளனர்.மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: