×

மதுரவாயல் - துறைமுகம் சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:
தமிழகத்தில் மேம்பாலம் என்றால் அது 1973ம் ஆண்டு கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம்தான் ஞாபகத்திற்கு வரும். இதை கொண்டு வந்தவர் கலைஞர். அதற்கு பிறகு நம்முடைய முதல்வர் சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 11 மாதங்கள் மேயராக இருந்து 9 பாலங்களை கட்டினார். மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

தற்போது, அதை மீண்டும் செயல்படுத்த ரூ.5,770 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும். மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும். பல்லாவரம் - குன்றத்தூர் சாலை விரிவாக்க பணி குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, விரைந்து அந்த பணிகளை முடிக்க வேண்டும். காஞ்சிபுரம் - அரக்கோணம் இருவழி சாலை, செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரை 4 வழி சாலைகள், செய்யூர் கிழக்கு கடற்கரை சாலை இவையெல்லாம் கடந்த ஆண்டு கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர், டெல்லியில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தமிழகத்தில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துவதுடன், 5 சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். அப்படி அமைந்தால் பயண நேரம் வெகுவாக குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். மாநகராட்சி சாலைகளை தரம் உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர் கூறுகிறார். தற்போது, மாநகராட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். எனவே, அவர்கள் தீர்மானம் போட்டு நெடுஞ்சாலைத் துறையிடம் தந்தால், சாலைகள் பழுதுபார்க்கப்படும்,’ என்றார்.



Tags : Maduravale - Port Road ,Karunanidhi ,E. Karunaniti , Maduravayal - Port Road, Karunanidhi, Assembly, E. Karunanidhi MLA
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது