×

14 கொலைகள் செய்த கட்டை ராஜா பிரபல ரவுடிக்கு தூக்கு தண்டனை: குடந்தை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே  பார் உரிமையாளர் கொலை வழக்கில் பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ரவுடி கட்டை ராஜா மீது சென்னை, மதுரை, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 13 கொலை  வழக்கு, 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் சென்னியமங்கலம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் செந்தில்நாதன் (28). மாடாகுடி சின்னாற்றங்கரை அரசு மதுபான கடையில் பார் வைத்து நடத்தி வந்த இவர், கடந்த 2010ம் ஆண்டு ஆலங்குடியை சேர்ந்த ராஜா (எ) கட்டை ராஜா என்பவரிடம் உரக்கடை வைப்பதற்காக ரூ.1 லட்சம் கடனாக பெற்றார்.

உரக்கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடிய வில்லை. இந்நிலையில் கட்டைராஜா மற்றும் அவரது கூட்டாளிகள், செந்தில்நாதன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி செந்தில்நாதனை கட்டைராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் செந்தில்நாதனை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் செந்தில்நாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து  பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா (எ) கட்டை ராஜா, மாரியப்பன், ஆறுமுகம், மனோகரன், செல்வம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே கடந்த 2015ல் மனோகரனும், 2016ல் மாரியப்பனும் மரணம் அடைந்தனர். இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜா என்கிற கட்டை ராஜா (44), ராஜாவின் மாமா ஆறுமுகம் (51), ராஜாவின் தம்பி செல்வம் (39) ஆகியோர் இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை குற்றவாளிகளான ராஜா என்கிற கட்டை ராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளின் மீதான கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் முக்கிய குற்றவாளியான ராஜா என்கிற கட்டை ராஜாவை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிட்டு நீதிபதி பெஞ்சமின் ஜோசப் பரபரப்பு தீர்ப்பு அளித்தார். மேலும் இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகிய 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.12000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். பிரபல ரவுடி கட்டை ராஜா மீது சென்னை, மதுரை, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் 13 கொலை  வழக்கு, 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Gadha Raja ,Celebrity ,Rudi , Murders, Katta Raja, Famous Rowdy, Execution
× RELATED பிரபல தாதா மருத்துவமனையில் அட்மிட்...