ஏழை மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் நடக்கவே நடக்காது: பாஜவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: பாஜ உறுப்பினர்கள் ஏழை மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் அரசியலை தமிழகத்தில் புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ) அரசின் கவனத்தை ஈர்த்து பேசும்போது, ‘‘நேற்று (11ம் தேதி) சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் இதை செய்துள்ளது” என்றார். தொடர்ந்து அவர் பேசிய சில கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு: 1958ல் இந்த சமாஜம் உருவாக்கப்பட்டது. இதன் மீது 2004 முதல் பல்வேறு முறைகேடு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து 2013ல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சமாஜத்தின் நடவடிக்கை எதிராக அமைந்துள்ளது என்று அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தக்கார் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதன் காரணமாக தடை ஆணை விதிக்கப்பட்டது. கடந்த மார்ச் 17ல் தடை ஆணையை நீதிமன்றம் ரத்து செய்ததுடன் வழக்கையும் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை அமலுக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால், பாஜ தலைவர் தலைமையில் கூட்டமாக அங்கு சென்று, அயோத்தியா மண்டபத்துக்கு பூட்டு போட்டனர். அந்த சமாஜத்துக்கு சொந்தமாக திருமண மண்டபம், காரியக் கொட்டகை உள்ளது. இந்தியாவிலேயே குளுகுளு வசதி கொண்ட காரியக் கொட்டகை இதுவாகத்தான் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் வாடகை கட்டணம் அதிகமாக வசூலித்துள்ளனர். பக்தர்களிடம் இருந்து பணம் சுரண்டப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரானவராக சித்தரிக்கின்றனர். அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது திமுக ஆட்சியில் தான். 9,590 அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் நமது முதல்வரால்தான் தொடங்கப்பட்டது.

இதற்காக, மாதம் ரூ.10 கோடி செலவு செய்யப்படுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. சட்டத்திற்கான ஆட்சி. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்த பிரச்னை நீதிமன்றத்திலே இருக்கிறது. இன்று அதிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இருந்தாலும், நம்முடைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை. இருந்தாலும், பாஜகவை சேர்ந்த உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

அது என்னவென்று கேட்டால், ஏழை மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள். சாமானிய மக்கள் பாதிக்கிற வகையில், இன்றைக்கு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை இவையெல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது. அதை கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நீங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியை பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களிடத்திலே, குறிப்பாக, பிரதமரிடத்திலே நான் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன்.

எனவே, அதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து, அதை பெறுவதற்கான முயற்சியிலே நீங்கள் ஈடுபட வேண்டும். நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்துகொண்டு நீங்கள் நடக்க வேண்டும். எனவே தேவையில்லாமல், இதிலே அரசியலை புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியை பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: