×

தமிழக பாஜ இந்தி திணிப்பதை ஒருபோதும் ஏற்காது இந்தியை திணிக்க முயற்சித்தால் எதிர்ப்போம்: சென்னையில் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ இந்தி மொழியை திணிப்பதை ஒருபோதும் ஏற்காது. இந்தியை திணிக்க முயற்சித்தால் எதிர்ப்போம் என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி:
தமிழக பாஜ இந்தி மொழியை திணிப்பதை ஒருபோதும் ஏற்காது. இந்தியை திணிக்க முயற்சித்தால் பாஜ எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் இந்திமொழியை திணித்தனர். ஆனால் ஒன்றிய பாஜ அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி விருப்ப மொழியாக மட்டும்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ்மொழியை இந்தியாவின் இணைப்பு மொழியாக வரவேண்டும் என்று கூறியுள்ளதை நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

குறிப்பாக பிற மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி அந்தந்த மாநிலங்களில் குறைந்தது 10 பள்ளிகளில் தமிழ் வழியில் முழுமையான கல்வியை வழங்க வலியுறுத்த வேண்டும். அதற்குரிய நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழ்மொழி வளர்ச்சி அடைந்து இந்தியாவின் இணைப்பு மொழியாக வரமுடியும். அத்தகைய நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக பாஜவும் தமிழக அரசுடன் இணைந்து செயல்படும்.

தேசிய கல்விக் கொள்கையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தான் உத்தரவிட்டுள்ளது. தமிழக மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் மொழியை கட்டாயம் படிக்க வேண்டும். இந்த மொழிகளை தவிர்த்து விருப்பப்படக்கூடிய பிற மொழிகளை 5 மொழிகள் வரை கூட இன்றைய காலகட்டத்திற்கு மாணவர்கள் படிக்கலாம்.

பெட்ரோல், டீசல் விலைக்கான கலால் வரியை குறைப்பதன் மூலம் ஒன்றிய அரசுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் தமிழக அரசுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் ரூ.2720 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Paja ,Anamalai ,Chennai , Tamil Nadu Baja, Hindi Dump, Chennai, Annamalai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...