சென்னையில் கடல் பாலம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை:சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிறது. சென்னை முதல் நாகப்பட்டினம் வரை பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை முதல் திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரையிலான சாலை, 4 வழித் தடத்தில் இருந்து 6 வழித்தடமாக மேம்படுத்தப்படுகிறது. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை மற்றும் செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை உள்ள சாலையினை 8 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகளுக்கான நேர்பாட்டிற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திண்டிவனம் முதல் கன்னியாகுமரி வரை பணிகள் தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  

சென்னை துறைமுகம் முதல் மணலி - திருவொற்றியூர் சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க கடல் பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: