ஓரகடம் சிப்காட் குடோனில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரும்பு காயில் மாயம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரகடம் சிப்காட் பகுதியில் உள்ள குடோனில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 6 இரும்பு காயில் மூலப்பொருட்கள் மாயமாயின. இதனை மர்மநபர்கள் கடத்தினார்களான என போலீசார் விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சிப்காட் பகுதியில் லாரி, கார் உள்பட பல வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு, உற்பத்தி செய்ய மூல பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து, உதிரி பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தும் இரும்பு உருளைகளான மூலப்பொருட்கள், இந்த குடோனில் லாரிகள் மூலம் கொண்டு வந்து சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர், அதனை உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களின் அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிற்சாலை நிர்வாகிகள், பொருட்கள் இருப்பை கணக்கெடுத்தனர். அப்போது, குடோனில் இருந்த 6 இரும்பு காயில் மூலப்பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து மாயமானது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.30 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகம், ஒரகடம் போலீசில் புகார் அளித்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலை நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் செக்யூரிட்டிகளிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: