×

ஆர்சிபி அணிக்கு எதிராக உத்தப்பா - துபே அமர்க்களம்

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராபின் உத்தப்பா - ஷிவம் துபே ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 216 ரன் குவித்தது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசியது. உத்தப்பா, ருதுராஜ் இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். ருதுராஜ் 17 ரன் எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த மொயீன் அலி 3 ரன் எடுத்து ரன் அவுட்டாக, சிஎஸ்கே 6.4 ஓவரில் 36 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், உத்தப்பா - ஷிவம் துபே இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்களைப் பிரிக்க ஆர்சிபி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு, பெங்களூர் பந்துவீச்சை சிதறடித்த உத்தப்பா 33 பந்திலும், துபே 30 பந்திலும் அரை சதம் அடித்தனர். தொடர்ந்து அமர்க்களமாக விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்து அசத்தியது. உத்தப்பா 88 ரன் (50 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி ஹசரங்கா டி சில்வா பந்துவீச்சில் கோஹ்லியிடம் பிடிபட்டார்.

கேப்டன் ஜடேஜா சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்தது. நடப்பு தொடரின் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. துபே 95 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்), எம்.எஸ்.தோனி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் பந்துவீச்சில் ஹசரங்கா 2, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, ஆர்சிபி அணி 20 ஓவரில் 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது. கேப்டன் டு பிளெஸ்ஸி, அனுஜ் ராவத் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Tags : Uthappa ,Dubai Amarkkalam ,RCB , Uthappa - Dubai Amarkkalam against RCB team
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...